தையிட்டி விகாரையை முன்வைத்து மதவாதம் மற்றும் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முயற்சிப்பதான குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி அநுரகுமார வழங்கியிருக்கும் பதிலை எவ்வாறு புரிந்துகொள்வது? ‘குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மதவாதம் மற்றும் இனவாதத்தைத் தூண்டுவதை அனுமதிக்க முடியாது’, என்று குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, வடக்கு மக்களின் உண்மையான தேவைகளுக்கு அமைவாக பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
வடக்கு மக்களின் உண்மையான பிரச்னை என்பதால் அவர் குறிப்பிட முற்படுவது என்ன? கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரித்திருந்தனர். இதனை ஒரு வரலாற்று மாற்றமாகவே அநுரகுமாரவும் அவரின் அரசாங்கமும் கருதுகின்றது. ஜே. வி. பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனை வரலாற்று மாற்றமாகவும் தமிழ் மக்கள் இனவாத அரசியலிலிருந்து வெளியில் வந்திருக்கின்றனர் எனவும் பேசிவருகின்றார்.
தமிழ் மக்கள் இனவாதத்திலிருந்து வெளியில் வந்திருக்கின்றனர் என்பதன் மூலம் இதுவரையில் தமிழ் மக்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வுகளையே அவர் இனவாத அரசியல் என்று குறிப்பிட்ட முற்படுகின்றார். இராமலிங்கம் சந்திரசேகரனும் அண்மையில் வடக்கு அரசியல்வாதிகளால்தான் தமிழ் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் அரசாங்கத்தின் தமிழர் பிரச்னை தொடர்பான கொள்கை நிலைப்பாடு தெளிவாகவே தெரிகின்றது.
அதாவது, தமிழ் மக்கள் தங்களுடைய அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர் – எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக ஆதரிக்கவுள்ளனர், இந்த நிலையில் வடக்கு மக்களின் பிரச்னை என்பது, தமிழ் அரசியல்வாதிகள் கூறுகின்ற விடயங்கள் அல்ல – மக்களின் உண்மையான பிரச்னை என்பதும் அரசியல்வாதிகளின் பிரச்னை என்பதும் வேறு. கோட்டாபய ராஜபக்ஷவும் இவ்வாறானதொரு பார்வையையே முன்வைத்திருந்தார். அவர் அரசியல் விடயங்களின் நெளிவுசுழிவுகளை அறியாமல் வெளிப்படையாக பேசியிருந்தார்.
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்னை பொருளாதாரப் பிரச்னையே தவிர, அரசியல் பிரச்னையில்லை – தமிழ் மக்களுக்கு என்று பிரத்தியேக அரசியல் பிரச்னை என்று ஒன்றில்லை – அவ்வாறு இருப்பதாக அரசியல்வாதிகள்தான் கூறிவருகின்றனர். ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதனை நிதானமாகவும் தூரநோக்குடனும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறும் முன்னெடுக்க முயற்சிக்கின்றது. இந்த நிலையில்தான் வடக்கு மக்களின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர் உண்மையில் கூறுவது வடக்கு மக்கள் இப்போது தையிட்டியை முன்வைத்து பேசப்படும் அரசியலோடு இல்லை – அவர்களின் பிரச்னை வேறு. அந்த உண்மையான பிரச்னைகளை தனது அரசாங்கம் கருத்தில் கொள்ளும். அனைத்து விடயங்களுமே, கடந்த பொதுத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டுதான் உரையாடப்படுகின்றது. ஒருவகையில் அது சரியும்கூட – ஏனெனில், இன்று தையிட்டியை அகற்ற வேண்டும் என்று கூறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியுடன் வடக்கு மக்கள் நிற்கவில்லை. எனவே, இதனை எதிர் கொள்ள வேண்டுமாயின் தமிழ் கட்சிகள் தங்களின் ஜனநாயக வலுவை உள்ளூராட்சி தேர்தல் மூலம் நிரூபிக்க வேண்டும்.ஓரளவுக்கு தமிழ் கட்சிகளுக்கு அது மீளவும் ஒரு குரலை வழங்கும்.