‘சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தாலும், அதற்கான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. எந்தவித வேலைத்திட்டங்களையும் முன்வைக்காது சர்வகட்சி அரசாங்கத்துக்கு செல்ல முடியாது’ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அரசாங்கத்துக்கு ஐந்து வருட பலத்தை மக்கள் வழங்கியுள்ளனர்.
எதிர்க் கட்சியாக இருப்பதற்கான பலத்தை மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர்.
அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது என்பதற்காகவே தற்போதைய ஆட்சியாளர்கள்; எமக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
எமக்கு அவ்வாறான அழைப்பு விடுக்கின்றார்கள் என்றால் அதற்கான வேலைத்திட்டங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.
ஊழல் மோசடிமிக்க ஆட்சியாளர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே மக்கள் எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அவ்வாறான நிலையில் தற்போதைய அமைச்சரவையில் ஊழல்மோசடிமிக்கவர்களும் உள்ளனர்.
பாரியளவிலான ஊழல்மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
அது மட்டுமல்ல. தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கையை 30ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக இராஜாங்க அமைச்சர்களின்; எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
அமைச்சரவை எண்ணிக்கை 70ஆக அதிகரிக்கவுள்ளது.
22ஆவது திருத்தத்திலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.