Home உள்நாட்டு எனது மகனை கொலை செய்துவிடுவோம் என வீட்டுக்கு வந்து மிரட்டினர் – மனம் திறந்தார் மஹிந்த தேசப்பிரிய

எனது மகனை கொலை செய்துவிடுவோம் என வீட்டுக்கு வந்து மிரட்டினர் – மனம் திறந்தார் மஹிந்த தேசப்பிரிய

0
எனது மகனை கொலை செய்துவிடுவோம் என வீட்டுக்கு வந்து மிரட்டினர் – மனம் திறந்தார் மஹிந்த தேசப்பிரிய

1988ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது வேட்புமனுக்களைப் பெற்றுக்கொண்டால் என்னை சுட்டுக்கொல்வோம் என அச்சுறுத்தினர் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நான் அவர்களின் உத்தரவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எனது இரண்டு வயது மகனைக் கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டுக்கு சென்று மிரட்டினர் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அரச தொழில்வாழ்க்கையின்போது தான் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள், சவால்கள் தொடர்பில் சிலோன் ருடேக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கேள்வி: உங்கள் தொழில்வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கின்றீர்களா?

பதில்:பல சவால்களை எதிர்கொண்டிருக்கின்றேன். 1982ஆம் ஆண்டு நடைபெற்ற முல்கிரிகல இடைத்தேர்தல் மிகவும் சவால் மிக்கது.
1984 இல் அக்கீமன இடைத்தேர்தலின்போது அரசாங்க – எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கு மத்தியில் மோதல் இடம்பெற்றது.நானும் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் அந்த மோதலின் நடுவில் சிக்கிக்கொண்டோம்.

1988இல் தேர்தலுக்காக மனுக்களைப் பெறவேண்டிய நிலையிலிருந்தோம்.அவ்வேளை வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டால் என்னைச் சுட்டுக்கொல்லப்போவதாக ஜே.வி.பி.யின் ஆயுதப்பிரிவான மக்கள் ஜனநாய முன்னணியைச் சேர்ந்தவர்கள் அச்சுறுத்தல் விடுத்தனர்.

நான் அவர்களின் உத்தரவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எனது இரண்டு வயது மகனைக் கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டிற்குச் சென்று மிரட்டினர். எச்சரிக்கை கடிதமொன்றையும் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

அந்தநாள்களில் நான் அம்பலாங்கொடைக்கும் மாத்தறைக்கும் நாளாந்தம் பேருந்திலேயே பயணம் மேற்கொள்வேன். சிலவேளைகளில் புகையிரதத்தில் செல்வேன.; எனது கைப்பைக்குள் பலஅச்சுறுத்தல் கடிதங்கள் காணப்படும்.

ஒருநாள் நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை பேருந்து சோதனைச் சாவடியொன்றில் நிறுத்தப்பட்டது.என்னிடம் ஜே.வி.பியின் கடிதங்கள் பல காணப்பட்டதால் நான் அவர்களின் ஆதரவாளன் எனப் படையினர் நினைத்தனர்.
நான் எங்கிருந்து வருகின்றேன் எனக் கேட்டு எனது அடையாள அட்டையைப் பார்த்த அவர்கள் நான் பொரம்ப பகுதியைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடித்தனர்.

அவ்வேளை பொரம்ப ஆனந்தய என்ற ஜே.வி.பி. தலைவர் ஒருவர் இருந்தார், அவரை தெரியுமா? எனக் கேட்டனர். நான் அவர் எனது சகோதரர் தான். அவரைத் தெரியும் எனக் குறிப்பிட்டேன்.
அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பேருந்தில் பயணித்த ஏனையவர்களைச் செல்ல அனுமதித்துவிட்டு என்னைத் தொடர்ந்து விசாரணை செய்தனர்.

அதன் பின்னர் அவர்கள் எனது தொழில் என்ன? எனக் கேள்வியெழுப்பினர். நான் உதவித் தேர்தல் ஆணையாளர் எனத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் ஏன் அதனை முதலில் தெரிவிக்கவில்லை எனக் கேட்டனர்.
நான் நீங்கள் முதலில் கேட்கவில்லை எனத் தெரிவித்தேன். அவர்கள் மன்னிப்புக் கேட்ட பின்னர் என்னைச் செல்ல அனுமதித்தனர்.

அதன் பின்னர் அலுவலகத்துக்கு வந்த அவர்கள் மீண்டும் மன்னிப்புக் கேட்டனர். என்னைக் காக்கவைத்தமைக்காக சிரேஷ்ட அதிகாரிகள் அவர்களைக் கண்டித்தனர். நான் அது எனது தவறுதான் எனத் தெரிவித்தேன்.

கேள்வி: தேர்தல் பணிகளில் உங்களது மகத்தான தருணங்கள், மறக்க முடியாத தருணங்கள் என்ன?
பதில்:ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது 1988-89களில் நாங்கள் நடத்திய தேர்தல்களை மறக்க முடியாது.

1989 பொதுத்தேர்தலின் போது அரசாங்க ஊழியர்கள் அச்சத்தால் தங்களது வீடுகளிலேயே இருந்தனர். நாங்கள் அறிவிப்புக்களின் மூலம் அவர்களை அழைக்க வேண்டிய நிலையிலிருந்தோம்.

நாங்கள் இரு அரசாங்க ஊழியர்களை கம்புருப்பிட்டி யட்டல வாக்களிப்பு நிலையத்துக்கு அனுப்பினோம்.பெண் ஊழியர் ஒருவரும் பணியிலிருந்தார். எவரும் வாக்களிக்க வரவில்லை. அந்த அரசாங்க ஊழியர்கள் இருவரும் வாக்குப்பெட்டிகளுடன் திரும்பிக்கொண்டிருந்தவேளை சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதுவே எனது தொழில் வாழ்க்கையில் மிகவும் வேதனையளித்த சம்பவம்-என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here