மில்லரின் அதிரடி அரைச் சதத்துடன் கிறிஸ் மொறிஸின் பறக்கவிட்ட 4 சிக்ஸர்களும் கைகொடுக்க டில்லி அணியை 3 விக்கெட்களால் வெற்றி கொண்டது ராஜஸ்தான் அணி.
இந்தியன் பிறிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். இருபது – 20 தொடரில் நேற்று டில்லி கப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் மோதின.
மும்பையில் நடந்த இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்ஸன் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார்.
களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கிறிஸ் மொறிஸ், ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர், முஸ்தபிர் ரஹ்மான் என நான்கு வீரர்கள் மாற்றத்துடன் களமிறங்கியது.
துடுப்பெடுத்தாடிய டில்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்கம் கொடுத்தது பிரித்வி ஷா, தவான் இணை. பிரித்வி ஷா 2 ஓட்டங்களே எடுத்தார். உனாட்கட்டின் பந்தில் மில்லரிடம் பிடி கொடுத்து அவர் வீழ்ந்தார். அடுத்து வந்த அஜிங்க்ய ரஹானே தவானுடன் சேர்ந்தார். இந்நிலையில், 9 ஓட்டங்களைப் பெற்றிருந்த தவான் ஆட்டமிழந்தார்.
ரஹானேயும் 8 ஓட்டங்களுடன் உனாட்கட்டின் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். நான்காவது வீரராக களமிறங்கிய ரிஷப் பந்த் மட்டும் அதிரடியாக ஆடினார். இந்நிலையில், ஸ்ரொய்னிஸ் ஓட்டம் எதனையும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
32 பந்துகளில் 9 பௌண்ட்ரிகளுடன் 51 ஓட்டங்களை எடுத்து ரிஷப் பந்த் விழ, அடுத்து வ்நதவர்களில் யாதவ் 20, ரொம் கரன் 21, அஸ்வின் 7 என ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் நிறைவில் டில்லி கப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை எடுத்தது.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் உனாட்கட் 3, ரஹ்மான் 2 விக்கெட்களையும், மொறிஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
148 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கு நோக்கித் துடுப்பெடுத்தாடியது ராஜஸ்தான் றோயல்ஸ்.
தொடக்கம் கொடுத்த பட்லர் 2, மனன் வோக்ரா 9 என ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சஞ்சு சாம்ஸன் 4, சிவம் டுபே 2 என வீழ்ந்தனர். 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் எனத் தடுமாறிய ராஜஸ்தான் அணிக்கு டேவிட் மில்லர் நிலைத்து ஆடினார்.
ஆனாலும், மறுமுனையில் வந்த ரியான் பராக் 2, ராகுல் தெவாட்டியா 19 என ஆட்டமிழந்தனர். 43 பந்துகளில் 7 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி 62 ஓட்டங்களை குவித்த மில்லர் ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி தடுமாறியது. ஆனாலும், 8ஆவது விக்கெட்டுக்காக இணைந்த கிறிஸ் மொறிஸ், உனாட்கட் இணை சிறப்பாக ஆடியது.
இதனால், 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
கிறிஸ் மொறிஸ் 18 பந்துகளில் 4 சிக்ஸர்களை பறக்க விட்டு 36 ஓட்டங்களையும், உனாட்கட் ஒரு சிக்ஸருடன் 11 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டில்லியின் பந்துவீச்சில், ஆவேஷ் கான் 3 விக்கெட்களையும் ரபாடா, வோக்ஸ் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.