ஒடுக்குமுறை நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தெரிவு அல்ல

0
124

கலாநிதி ஜெகான் பெரேரா

அமெரிக்க கண்டத்தில் தனது சர்வதேச வெற்றிகளுக்கு பிறகு ஜனாதிபதி ரணில் விங்கிரமசிங்க நாடுதிரும்பிய நிலையில் நாடு தொடர்ந்தும் இடருக்குள்ளேயே இருக்கிறது. கியூபாவிலும் நியூயோர்க்கிலும் முககிய சர்வதேச தலைவர்கள் கலந்துகொண்ட அரங்குகளில் தனது முத்திரையை ஜனாதிபதி பதித்திருக்கிறார்.

கியூபாவில் ஜி 77 உச்சிமகாநாட்டில் வளர்ச்சியடைந்தவரும் நாடுகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விக்கிரமசிங்க உரையாற்றினார்.21 ஆம் நூற்றாண்டில் வெளிக்கிளம்பும் தொழில்நுட்ப பிளவைப் ( Technological divide) பற்றியும் அந்த இடைவெளியை நிரவுவதற்கு எண்ணிம வாக்கத்தையும் (Digitalization ) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் பற்றியும் அங்கு அவர் பேசானார். புதிய ஹவானா பிரகடனத்தை ஆதரிப்பதில் இலங்கையின் கடப்பாட்டையும் உறுதிப்படுத்திய அவர் சர்வதேச மன்றங்களில் ஜி 77 மற்றும் சீனாவின் கூட்டுக் குரலுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அரச தலைவர்கள் மத்தியில் தனதுரையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின்உறுப்புரிமையின் விரிவாக்கம் உலக சமாதானத்துக்கு அவசியம் என்று வலியுறுத்தியபோது விக்கிரமசிங்க சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் தனது அனுபவத்தை
பகிர்ந்துகொண்டார். பொருளாதாரம், நிதி, நிறுவனக்கட்டமைப்பு மற்றும் நல்லிணக்க முனைகளில் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் மீளக்கட்டியெழுப்புவதை நோக்கியும் பொருளாதார நிலயுறுதிப்படுத்தல் மற்றும் மீட்சி நோக்கியும் தன்னால் முன்னெடுக்கப்பட்ட சீரதிருத்தங்களையும் அவர் விளக்கிக்கூறினார்.

ஆனால் இவை தொடர்பில் ஜனாதிபதி கடுமையான சவால்களை எதிர்நோக்குகிறார்.கடந்த வருடம் 7 சதவீதத்தினாலும் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் 11 சதவீதத்தினாலும் சுருக்கமடைந்த நாட்டின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் மேலும் 3 சதவீதத்தினால் சுருக்கமடைந்து தொடர்ந்தும் கீழ் நோக்கிய திசையிலேயே இருக்கிறது. பொருட்களுக்கு தட்டுப்பாடும் நீண்ட வரிசைகளும் இல்லாமல் இருப்பதற்கு காரணம் பொருளாதாரச் செயற்பாடுகள் மேம்பாடடையத் தொடங்கியது அல்ல மாறாக செலவளிப்பதற்கு மக்களிடம் பணம் இல்லாதமையேயாகும்.

கடந்த வருடம் பணவீக்கம் மக்களின் வருமானத்தை அரைவாசியாக்கியதுடன் உயர்ந்த வரிவிதிப்புகள் வரி வலைக்குள் உள்ள மத்தியதர வர்க்கத்தினரையும் துறைசார் நிபுணத்துவ பிரிவினரையும் கடுமையாக பாதித்த நிலையில் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பொருளாதாரத்துக்கு மிகவும் அவசியமான பல்வேறு துறைகளில் பெரிய இடைவெளி ஏற்படுகிறது.

ஆனால் மத்தியதர வர்க்கத்தையும் துறைசார் நிபுணத்துவ பிரிவினரையும் நேரடியாக பாதித்திருக்கும் வரிச் சீர்திருத்தங்களும் வறிய மக்களைப் பாதித்திருக்கும் விற்பனை வரிகளும் கிடைக்கவிருக்கும் சர்வதேச நாணய
நிதியத்தின் உதவியினால் நிரப்பப்பட வேண்டியிருக்கும் இடைவெளியை இன்னமும் மூடவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வருவாய் இலக்குடன் ஒப்பிடும்போது அரசாங்க வருவாயில் 100 பில்லியன் பற்றாக்குறை காணப்படுகிறது. வரிப்பணம் பொருத்தமில்லாத வகையில் ஒதுக்கீடு செய்யப்படாமலும் எமது நாட்டில் தொடரும் நடைமுறையாகக் காணப்படும் திரட்டுக்கு உள்ளாகாமலும் ஒழுங்கமைவான முறையில் பயன்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்.

ஒப்புரவில்லாத சுமைகள்

மக்கள் மீது மேலும் பொருளாதார இடர்பாடுகள் சுமத்தப்படக்கூடிய அறிகுறிகள் இருக்கின்றன. அரசாங்கம் சுமையை தனவந்தர்கள் மீது அல்ல வறிய மக்கள் மீது விகிதச்சமானமற்ற முறையில் சுமத்துவதே இங்குள்ள பிரச்சினையாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஊடாட்டம் குறித்து ஆழமான ஆய்வைச் செய்திருக்கும் வெறைற் றிசேர்ச் சிந்தனைக் குழாமின் தலைவரான கலாநிதி நிஷான் டி மெல் உள்நாட்டுக்கடன் மறுசீரமைப்பின் சுமைகளில் சிலவற்றை வங்கி முறைமை தாங்கியிருந்தால் வங்கிகள் நிலைகுலைந்திருக்கும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. எந்தவொரு ஆய்வையும் செய்யாமலேயே அரச்ங்கம் அந்த முடிவை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

” கடன் மறுசீரமைப்பைச் செய்த ஏனைய சகல நாடுகளும் அந்த மறுசீரமைப்பின் சுமையின் ஒரு்பகுதியை வங்கித்துறை மீது சுமத்தின.கடன் மறுசீரமைப்பின்போது வங்கிகளைப் பாதுகாப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.சகல சுமைகளையும் ஓய்வூதிய நிதியங்கள் மீது சுமத்தியிருக்கும் அரசாங்கம் இந்த நிதியங்கள் மீதான தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டது என்று கூறுகிறது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினால் பாதிக்கப்பட்டால் வங்கிகள் நிலைகுலைந்துவிடும் என்று அரசாங்கம் கூறுகிறது. எது உண்மை? சுமையின் ஒரு பகுதியை வங்கிகள் ஏன் பகிர்ந்துகொள்ளக்கூடாது?”

பொருளாதார மறுசிரமைப்பின் சுமை விகிதச் சமானமற்ற முறையில்சமூகத்தின் வறிய மக்கள் பிரிவுகள் மீது விழுகிறது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. பொறுப்பக்கூறல் இல்லாத காரணத்தினால் அரசாங்கம் இலாபங்களை தனியார் மயப்படுத்துகின்ற அதேவேளை இழப்புக்களை சமூகமயப்படுத்துகிறது.

” அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கும் தங்களது நண்பர்களுக்கும் பயன்கிடைப்பதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்தும்போது அவர்கள் வளர்ச்சியின் பயன்களை சிறிய ஒரு குழுவினர் அனுபவிப்பதை உறுதிசெய்கிறார்கள் அல்லது குறிப்பிட்ட குழுக்களுக்கு பயனைத் தரக்கூடிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆனால் நிலைவரம் பிழையாகப் போகும்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் இழப்புக்களை பொதுவில் மக்கள் மீது சுமத்துவதை உறுதிசெய்கிறார்கள். இதையே இலங்கையில் நாம் காண்கிறோம்.”

இந்த கருத்தை சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டமைப்பு ஒன்றினால் தயாரிக்கப்பட்ட ஆட்சிமுறை தொடர்பான அறிக்கையிலும் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த அறிக்கையை பேராசிரியர் அர்ஜூனா பராக்கிரம எழுதியிருந்தார். ” தற்போது காணப்படும் பொருளாதார அநீதி பற்றிய உணர்வு உத்தேச சீர்திருத்தங்களின் சுமையின் எந்தவொரு பகுதியையும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் சுமக்காமல் இருக்கும் நிலைவரத்தினால் மேலும் தீவிரமடைகிறது. நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே எந்த வித கலந்தாலோசனையும் இல்லாமல் சுமை உறுதியாக திணிக்கப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

சுமையை ஒப்புரவற்ற முறையில் பகிர்கின்ற இந்த வேலையை அரசியல் நியாயப்பாடு இல்லாத ஒரு அரசாங்கம் செய்வது மேலும் உறுதிப்பாடில்லாத சூழல் உருவாவதற்கு காரணமாக அமையும். தற்போது அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மக்கள் போராட்டத்துக்கு மத்தியில் பதவிகளை விட்டு ஓடினார்கள்.ஊழல் நடவடிக்கைகளினால் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்தமைக்காக அவர்கள் பொறுப்புக் கூறவைக்கப்படவேண்டும் என்று இலட்சக்கணக்கில் மக்கள் வீதிகளில் இறங்கிநின்று கோரினார்கள்.

எதிரணிக்கு மாறிய சிலரைத் தவிர இப்போது அமைச்சர்களாக இருக்கும் சகலரும் தங்களது அமைச்சுப் பொறுப்புக்களை இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.134 பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் சட்டரீதியாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் விக்கிரமசிங்க மீண்டும் அமைச்சர்களாக சட்டரீதியாக நியமித்தார். ஆனால் நியாயப்பாட்டு பற்றாக்குறை அரசாங்கத்தை தொடர்ந்தும் பயமுறுத்திக்கொண்டேயிருக்கிறது. அரசாங்கம் தற்போது அதன் அதிகார நிலையை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்ற போதிலும் பாதுகாப்பற்றதாகவே தன்னை உணருகிறது. சகல மக்களையும் பாதிக்கின்ற தீர்மானங்களை எடுக்கும்போது நீதியாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்வதே அரசாங்கம் நியாயப்பாட்டைப் பெறுவதற்கான வழியாகும்.

ஜனநாயக விரோத சட்டங்கள்

பரிகார நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்துனான அரசாங்கத்தின் தற்போதைய ஈடுபாட்டை தொடர்ந்து பேணுவது கஷ்டமாகப் போகலாம். சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறுவதனால் மாத்திரம்தான் இந்த நிலைமை என்றில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டம் பற்றி பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையும் இல்லை.

எதிர்காலத்தில் பொருளாதார நிலைவரத்தை சர்வதேச நாணய நிதியம் மோசமாக்கும் என்று சுமார் 45 சதவீதமான இலங்கையர்கள் நம்புவதாக வெறைற் றிசேர்ச்சினால் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு காட்டுகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் தற்போதைய செயற்திட்டம் எதிய்காலத்தில் பொருளாதாரத்தை மேம்டுத்தும் என்று 28 சதவீதமான இலங்கையர்கள் மாத்திரமே நம்புகிறார்கள்.

பொருளாதார நிலைவரத்தைச் சமாளிப்பதில் மக்கள் முகங்கொடுக்கும் கஷ்டங்கள் அதிகரிப்பதால் போராட்டங்கள் மூளக்கூடும். பொருளாதார இடர்பாடுகளைத் தணிப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிக்கொள்ளப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டத்துக்கு பாதிப்பாக அமையக்கூடியதாக உறுதிமொழிகளை வழங்குவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

சர்வதேச நாணய்நிதியத்துடனான செயற்திட்டத்தை பாதுகாப்பதற்கு தேர்தல்களை ஒத்திவைக்கவேண்டியது அவசியமாகலாம் என்று ஒரு கருத்தைக் கூறி அரசாங்க உறுப்பினர்கள் நாட்டுமக்களின் உணர்வுகளை அறிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள் போன்று தெரிகிறது.பொருளாதார மீட்சியைக் காரணம் காட்டி இந்த பாதையில் செல்வதற்கான விருப்பத்தை அரசாங்கமும் வெளிக்காட்டியிருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு முன்னதாகவே இவ்வருடம் மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல்களை அரசாங்கம் (தேர்தல்களை நடத்துவதை விடவும் பொருளாதார மீட்சி மீது கவனத்தைக் குவிக்கவேண்டியது அவசியம் என்று காரணம் கூறி ) ஒத்திவைத்தது.

இன்னும் ஒரு வருடகாலத்தில் நடத்தப்படவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக 2024 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டால் மக்களின் பொருளாதாரத் தேவைகளை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாமற்போகும் என்று ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அண்மையில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான மக்களின் உரிமையையும் கட்டுப்படுத்தக்கூடிய சர்ச்சைக்குரிய இரு சட்டமூல வரைவுகளை இத்தகைய பின்னணியிலேயே நோக்கவேண்டியிருக்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் நோக்கில் முன்வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் (Anti — Terrorism Act) அதன் வீச்செல்லையில் அகல் விரிவானதாகவும் மக்கள் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரத்தைக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது. பொதுமக்களை அல்லது அவர்களில் ஒரு பிரிவினரை அச்சுறுத்தியதாக குற்ற்சாட்டப்படுபவர்களை இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யமுடியும்.

இணையப் பாதுகாப்பு சட்டமூலம் ( Online Safety ) அரசியல் தொடர்பாடல் நோக்கங்களுக்கு இணையத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டதாக இருக்கிறது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கான ஏற்பாடு இந்த சட்டமூலத்தில் இருக்கிறது. சகல உறுப்பினர்களையும் ஜனாதிபதியே நியமிப்பார். இணைய வழி வரும் பொருளடக்கங்களின் உண்மைத்தன்மையை (Veracity of online content ) உறுதிசெய்யும் பணி இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இந்த ஆணைக்குழுவினால் எந்தவொரு சமூக ஊடகக் கணக்கை அல்லது இணையவழி பிரசுரத்தை (Online publication) தடைசெய்யவும் சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கு சிறைத் தண்டனையை சிபாரிசு செய்யமுடியும்.

மக்களின் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கடுமையாகப் பாதிக்கக்கூடிய இந்த இரு சட்டமூல வரைவுகளும் ஜனநாயகம் மற்றும் சடடத்தின் ஆட்சி மீது பாரதூரமான தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவற்றை வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை கேட்டிருக்கிறது.

இந்த இரு சட்டமூலங்களும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அரசாங்கம் தவறான பாதையில் செல்கின்ற வேளைகளில் கூட அதை எதிர்த்து சவால்விடமுடியாமல் போகும். ஆனால் பொருளாதார நிலைவரம் தொடர்ந்து மோசமாகிக்கொண்டு போகும்போது மக்களின் துன்பங்கள் அதிகரிக்கும் நிலையில் சட்டத்யைும் பாதுகாப்பு படைகளையும் பயன்படுத்தி ஒடுக்குமுறையை முன்னெடுப்பது நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தெரிவாக இருக்கப்போவதில்லை.