தற்போதைய நிலை தொடர்ந்தால் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அமெரிக்காவின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகையே கடந்த 2 ஆண்டுகளாகப் புரட்டிப் போட்டுக் கொண்டு இருப்பது கொரோனா வைரஸ் தான். கொரோனா காரணமாகப் பின்தங்கிய, வளரும் நாடுகள் மட்டுமன்றி முன்னேறிய நாடுகள்கூட மிகப் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடுமையான ஊரடங்கு, தடுப்பூசி பணிகள் என பல்வேறு முயற்சிகள் மூலம் ஒவ்வொரு நாடும் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக அமெரிக்கா உள்ளது. உலக போர்களைவிட அமெரிக்கா அதிகளவிலான தனது குடிமக்களை கொரோனாவிற்கு இழந்துள்ளது. அங்கு இதுவரை ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3.4 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து அமெரிக்காவின் முக்கிய சுகாதார அமைப்பான பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பு புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 4 வாரத்தில் மட்டும் உலகில் 12 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 34 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பு இயக்குநர் கரிசா எட்டியென் குறிப்பிட்டார்.
குறிப்பாக 4 முதல் 5 நாடுகளில் உயிரிழப்புகள் மிக மோசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இது குறித்து கூறுகையில், தற்போதைய நிலை தொடர்ந்தால் நமது நாட்டில் சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். இதனால் கொரோனா பரவலை முற்றிலுமாக அமெரிக்காவில் கட்டுப்படுத்த குறைந்ததது சில ஆண்டுகள் வரைகூட ஆகலாம். புதிய உருமாறிய கொரோனா வகைகள் வைரஸ் பரவல் வேகத்தை உயர்த்துகிறது. மேலும், உயிரிழப்புகளையும் இது அதிகப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகளில் வெறும் 10வீதமான மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அதிலும் மத்திய அமெரிக்கா நாடுகளில் இந்த நிலை மிக மோசமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கு தட்டுப்பாடு உள்ளதால் வல்லரசு நாடுகள் தங்களிடம் உள்ள கூடுதல் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சர்வதேச அளவில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகள் அதிகளவிலான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்கின்றன. இதனால் வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்கு போதிய தடுப்பூசிகள் தேவையான நேரத்தில் கிடைப்பதில்லை. இது அந்த நாடுகளில் உயிரிழப்புகளை அதிகரிக்கின்றன.