பொருளாதார மறுமலர்ச்சிக்கான மறுசீரமைப்புக்களை விரைவுபடுத்துவதிலும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதிலும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண சலுகைக்காக இலங்கை நிறைவேற்ற வேண்டிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றியுள்ளதாகவும் கடன் வழங்கும் பிரதான நாடுகளின் இறுதிச் சான்றிதழின் பின்னர் அது தொடர்பான செயன்முறைகள் நிறைவடையும் எனவும் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஏற்றுமதிக்கான விவசாய உற்பத்திகளை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன் போது பிரதமரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடனை மறுசீரமைக்கவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் திட்டங்களை உருவாக்கும் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கான ஒரு பாதுகாப்பு வலயம் அவசியமென கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இதன்போது சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், ஆகக் குறைந்த்து அரச துறையில் ஊதியத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், பலர் தங்கள் வருமான மார்க்கங்ளை இழந்துள்ளதால், பொதுத்துறையினர் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியனார். பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாரான மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர, பணிப்பாளர் கலாநிதி பி. கே. ஜி. ஹரிச்சந்திர மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் துறைப் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி வி. டி. விக்கிரமாராச்சி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.