சாணக்கியனை சி.ஐ.டிக்கு அழைத்து விசாரியுங்கள்- செஹான்

0
415

 2021ஆம் ஆண்டில் அரச தரப்பினர் மீண்டுமொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனரா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் கூறிய கருத்து மிகவும் பாரதூரமானதெனவும், அவரை உடனடியாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டுமென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று சபையில் முன்வைத்துள்ள கூற்று தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். 

“2021ஆம் ஆண்டில் அரச தரப்பினர் மீண்டுமொரு தாக்குதலை நடத்த திட்டமிடுகின்றனரா” என அவர் தெரிவித்துள்ள கருத்து மிகவும் பாரதூரமானதாகும். 

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சாட்சியங்களை பெற்றுக்கொள்ள உடனடியாக அவரை குற்றப்புலாய்வு திணைக்களத்துக்கு அழைக்கவேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் அவர்களின் கருத்தியலை ஆதரிப்பவர்களும் இன்று எமது அரசாங்கம் மீண்டுமொரு தாக்குதலை நடத்த திட்டமிடுவதாக கூறுகின்றனர். 

வேண்டுமென்றே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்காதிருந்த எதிர்க்கட்சியினர் மீண்டுமொரு காட்டிக்கொடுப்பு தயாராகியரா என கேள்வியெழுப்புகிறோம். 

சாணக்கியனின் கருத்து தொடர்பில் எமக்கு பாரிய சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவையும் உடனடியாக சாணக்கியனை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணைகளை நடத்தி அவரது கூற்று தொடர்பிலான உண்மை நிலையை அறிந்து பாராளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் அதனை வெளிப்படுத்துவது அத்தியாவசியமாகும் என்றார்.