ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடைக்கால வரவு – செலவு திட்டத்தை முன்வைத்திருக்கின்றார்.
அதிலுள்ள ஒரு விடயம் தொடர்பிலேயே இந்தத் தலைப்பு கவனம் செலுத்துகின்றது.
புலம்பெயர் நிதியமொன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி யோசனை ஒன்றை முன்வைத்திருக்கின்றார்.
புலம்பெயர் அலுவலகம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது புலம்பெயர் நிதியமொன்று உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதனை தமிழ்த் தேசிய தரப்புக்கள் எவ்வாறு கையாளப் போகின்றன? வழமைபோல் எதிர்த்து விட்டு அமைதியாக இருக்கப் போகின்றனவா அல்லது சில நிபந்தனைகளை முன்வைத்து விடயங்களை கையாள முற்படப்போகின்றனவா? புலம்பெயர் சமூகம் என்பதில், வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அடக்கப்பட்டாலும் கூட, தமிழ் புலம்பெயர் சமூகமளவுக்கு ஏனையவர்கள் முக்கியமானவர்கள் அல்லர்.
அவர்களால் சில பங்களிப்புகளை வழங்க முடிந்தாலும் கூட, தமிழ் புலம்பெயர் சமூகமளவுக்கு அவர்களால் பங்களிப்புக்களை வழங்க முடியாது.
இந்த நிலையில், தமிழ் புலம்பெயர் சமூகம் இந்தப் புதிய நிலைமையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது – என்பது முக்கியமானது.
அடுத்தது, இந்தப் புதிய நிலைமையை தாயகத்திலுள்ள தமிழ்த் தேசிய தரப்புக்களும் புலம்பெயர் அமைப்புக்களும் எவ்வாறு ஒருங்கிணைந்து எதிர்கொள்ளப் போகின்றன? நாடு பொருளாதார நெருக்கடி ஒன்றுக்குள் சிக்கியிருக்கின்ற நிலையில் தான், இவ்வாறானதொரு புலம்பெயர் நிதியம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க சிந்திக்கின்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கும் வரையில், நிலைமைகளை சமாளிப்பதற்கான ஓர் உத்தியாகவே சில விடயங்கள் நோக்கப்படுகின்றன.
இந்த இடத்தில் அரசாங்கத்திடம் சில நிபந்தனைகளை முன்வைப்பது தொடர்பில் புலம்பெயர் அமைப்புக்களும், தாயக தமிழ்த் தேசிய கட்சிகளும் சிந்திக்கலாம்.
வடக்கு – கிழக்கில் நேரடியாக பணியாற்றுவதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் சமூகம் ஒரு நிபந்தனையாக முன்வைக்கலாம்.
அதற்கான தனியானதொரு கட்டமைப்பைக் கோரலாம்.
ஏனெனில், புலம்பெயர் நிதியத்துடன் எந்தளவுக்கு சுயாதீனமாகப் பணியாற்றலாம் என்னும் கேள்விகள் பலருக்கும் எழலாம்.
இதனை எதிர்கொள்ளும் ஒரு தந்திரோபாயமாகவே இவ்வாறான சில நிபந்தனைகளை முன்வைக்கலாம்.
ஏனெனில், ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் வடக்கு – கிழக்குக்கான பிரத்தியேக அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைக்கு அமைவாகவே விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த அடிப்படையில் தமிழ் புலம்பெயர் சமூகம், வடக்கு – கிழக்கில் நேரடியாக பணியாற்றுவதற்கான நிபந்தனைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சந்தர்ப்பத்தை முற்றிலுமாக நிராகரிக்கவும் முடியும்.
ஆனால், இதனால் வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் செய்ய முடியாது.
உதாரணமாக புலம்பெயர் நிதியத்தை வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் பயன்படுத்தும்போது சிங்கள மற்றும் முஸ்லிம் பகுதிகளுக்கே நன்மைகிட்டும்.
குறிப்பாக, புலம்பெயர் என்னும் சொற்பிரயோகம், வெளிநாடுகளிலுள்ளவர்களைக் குறிக்கின்றது.
வெளிநாடு என்பது ஐரோப்பிய நாடுகளாகத்தான் இருக்க வேண்டுமென்பதல்ல.
ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்தும், ஓர் இலங்கையர் முதலீடுகளைக் கொண்டுவர முடியும்.
அதனை தனது திட்டமாக அவர் முன்னெடுக்கலாம்.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்திலிருக்கும் முஸ்லிம் வர்த்தகர்கள் இந்த வாய்ப்பைப் பெருமளவுக்குப் பயன்படுத்திக் கொள்வர்.
ஒன்றை எதிர்ப்பதன் மூலம் முழமையான நன்மைகளைப் பெற முடியுமென்றால் எதிர்ப்பதில் தவறில்லை.
ஆனால், எதிர்ப்பின் மூலம் குறித்த விடயத்தை தடுத்து நிறுத்த முடியாதென்றால், அந்த எதிர்ப்பு பெரியளவில் மக்களுக்கு பயன்படப் போவதில்லை.