சீனி இறக்குமதியில் மிகப்பெரிய ஊழல்: சுயாதீன விசாரணை வேண்டும்- இராதாகிருஸ்ணன்

0
304

மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படும் சீனிக் கொள்ளை தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

நுவரெலியாவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “நாட்டில் தற்போது பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் சீனி இறக்குமதி மூலம் வரிமோசடி செய்து அரசாங்கத்துக்கு கோடிக் கணக்கில் வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கி கொள்ளையைக் காட்டிலும் சீனிக் கொள்ளை பெரிய மோசடியாகக் கருதப்படுகின்றது. மத்திய வங்கி கொள்ளைமூலம் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கம்பனிகளின் வங்கி இருப்புகள் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன.

எனவே, சீனிக் கொள்ளை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் அரசாங்க விசுவாசிகள் இருக்கக்கூடும்.

அதேவேளை, இந்நாட்டில் இடம்பெறும் வன அழிப்பு, சுற்றாடல் அழிவு தொடர்பாக கடந்த காலங்களில் பிக்குகள் உரத்துக்குரல் எழுப்பினர். ஆனால், சிங்கராஜ பகுதியில் நடைபெறும் வன அழிப்புக் குறித்து கருத்து வெளியிட்ட யுவதியொருவரை மிரட்டும் பணி ஆரம்பமாகியுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளதுடன் வனத்துறை அதிகாரிகளும் அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இது யுவதியை அச்சுறுத்தும் செயற்பாடாகும். இதனை நாம் கண்டிக்கின்றோம்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை. இந்நிலையில், சம்பள உயர்வைத் தடுக்கும் வகையில் கம்பனிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. எனவே, சம்பளம் கைக்குக் கிடைத்த பின்னரே அதனை வெற்றியாகக் கருதமுடியும்.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் அறவழியில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கின்றனர். இவ்வாறு செய்வதைவிட அந்த மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.