மியன்மாரின், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள எஞ்சிய 5 குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு இராணுவம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மியன்மாரின் இராணுவ ஆட்சியை எதிர்த்து 77 வயதுடைய ஆங் சான் சூகி போராடி வந்தார்.
பின்னர் 2020 ஆண்டில் அவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியிருந்தது.
எனினும், அந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக கூறி, மியன்மார் இராணுவம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியது.
இதனையடுத்து ஆங் சான் சூகி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக, இராணுவ கிளர்ச்சி, கொரோனா விதிகளை மீறியமை, ஊழல் முறைகேடு, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
அந்த வழக்குகளில் தற்போது வரை ஆங் சான் சூகி 26 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 18 மாத விசாரணைகளின் அடிப்படையில் எஞ்சிய 5 வழக்குகளுக்கான தீர்ப்பு, நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.