சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பொறுப்பை ரவீந்திர ஜடேஜா ஏற்கவுள்ளார். ஐ. பி. எல். ஆரம்பித்த முதல் தொடரிலிருந்து மகேந்திர சிங் டோனி தலைவராக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மகேந்திர சிங் டோனி தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க முடிவெடுத்ததுடன், அவரே ரவீந்திர ஜடேஜாவை தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளார். 2012 முதல் சென்னை அணியில் விளையாடி வரும் ஜடேஜா, சென்னை அணியை வழிநடத்தும் மூன்றாவது வீரராக இருப்பார். இதேநேரம் இந்த தொடரிலும் அதற்கு பிறகும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி தொடர்ந்து விளையாடுவார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சனிக்கிழமை நடக்கும் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.