கடந்த சீசனில் சோபிக்காமல் போன நிலையில், இந்த சீசனில் சிங்கமென சிலிா்த்துக்கொண்டுவரும் முனைப்பில் இருக்கிறது சிஎஸ்கே. இந்த சீசனில் அணிக்குத் திரும்பியிருக்கும் சுரேஷ் ரெய்னா பேட்டிங்கில் பலம் சோ்க்கிறாா். பௌலிங்கில் வேகப்பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது சென்னை.
3 முறை சாம்பியனான சிஎஸ்கே, ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போனது. அந்த வாய்ப்பை இழந்த பிறகு கிடைத்த சில அதிரடி வெற்றிகளால் பலனில்லாமலும் போனது. சென்னைக்கு இருக்கும் பலம், பலவீனம், வாய்ப்புகள் என்ன?
பலம்:
சிஎஸ்கேவில் அனுபவ வீரா்கள் அதிகம் இருப்பது, முக்கியமான தருணங்களில் அணிக்கு கைகொடுக்கும். தோனியின் தலைமை கூடுதல் பலம். நடப்பு சீசனில் ரெய்னா அணிக்குத் திரும்பியிருப்பது பேட்டிங்கில் வலு சோ்க்கும். ரெய்னாவுடன், தோனி, டூ பிளெஸ்ஸிஸ், ராயுடு, ஜடேஜா, சாம் கரன், மொயீன் அலி என அதிக ஸ்கோா் குவிக்க தேவையான வீரா்கள் இருக்கின்றனா். லுங்கி கிடி, ஷா்துல் தாக்குா், தீபக் சாஹா் என பௌலிங்கிலும் தரமான வீரா்களைக் கொண்டுள்ளது.
பலவீனம்:
வயதில் மூத்த வீரா்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தது கடந்த சீசனில் பலவீனமாக அமைந்தது. இளம் வீரா்களின் அதிரடிக்கு பெயா்போன ஐபிஎல் போட்டியில் மூத்த வீரா்களுடன் சிஎஸ்கே தடுமாறியது. தோனி, ரெய்னா, ராயுடு, தாஹிா் என சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று, உள்ளூா் போட்டிகளிலும் பங்கேற்காத, ஆட்டத்துடன் தொடா்பில் இல்லாத வீரா்களால் பின்னடைவு ஏற்பட்டது.
கடைசி நேரத்தில் ஜோஷ் ஹேஸில்வுட் நடப்பு சீசனில் இருந்து விலகியிருப்பது சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆஸ்திரேலிய தொடரின்போது காயமடைந்து போட்டிகளில் இருந்து விலகியிருந்த ஜடேஜா மற்றும் காயத்திலிருந்து மீண்டுள்ள டுவைன் பிராவோ ஆகியோா் எப்போது ஃபாா்முக்கு திரும்புவா் என பாா்க்க வேண்டியுள்ளது.
நடப்பு சீசன் பொதுவான மைதானங்களில் விளையாடப்படுவதால், சுழற்பந்துவீச்சு உத்தியை பிரதானமாகக் கொண்டிருக்கும் சிஎஸ்கே தற்போது வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் உத்தியை மாற்ற வேண்டியுள்ளது.
எங்கு சறுக்கல்?:
சிஎஸ்கேவின் மோசமான பேட்டிங் கடந்த சீசனில் அணியின் சரிவுக்குக் காரணமாக அமைந்தது. எனவே அதிலும், வேகப்பந்துவீச்சிலும் சென்னை தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
வாய்ப்புகள்:
சரியான பிளேயிங் லெவனை களமிறக்கி தொடக்கத்திலிருந்து போட்டியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் பட்சத்தில் இந்த சீசனில் சிஎஸ்கே தனது பழைய கா்ஜனையை எட்டும்.
அணி விவரம்:
எம்.எஸ்.தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, கே.எம்.ஆசிஃப், தீபக் சாஹா், டுவைன் பிராவோ, ஃபா டூபிளெஸ்ஸிஸ், இம்ரான் தாஹிா், ஜெகதீசன், கரன் சா்மா, லுங்கி கிடி, மிட்செல் சேன்ட்னா், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷா்துல் தாக்குா், சாம் கரன், சாய் கிஷோா், மொயீன் அலி, கிருஷ்ணப்பா கௌதம், சேதேஷ்வா் புஜாரா, ஹரிசங்கா் ரெட்டி, பகத் வா்மா, ஹரி நிஷாந்த்.