ஜனாதிபதியின் தூரநோக்கு செயற்பட்டை பாராட்டிய இலங்கை ராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹா நாயக்க தேரர்

0
264

மஹா விஹாரவம்ச இலங்கை ராமஞ்ஞ மஹா நிக்காயவின் 72ஆவது உபசம்பதா புண்ணிய நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
வெலிவேரிய – நாரங்வல ஸ்ரீ சுமனகீர்த்தி பிரிவெனா மூல மஹா விஹாரையில் குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் நடைபெற்றது.
விஹாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, இவ்வருடம் உபசம்பதா மஹா விநய கர்மய இடம்பெற்றதை அடையாளப்படுத்தும் வகையில், நினைவுக் கல்வெட்டைத் திறந்து வைத்தார்.
இலங்கை ராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹா நாயக்கர் அக்கமஹா பண்டித அதி வணக்கத்துக்குரிய மக்குலேவே ஸ்ரீ விமல தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதை அடுத்து, உபசம்பதா நிகழ்வு ஆரம்பமானது.
இலங்கை ராமஞ்ஞ மஹா நிக்காயவின் உபசம்பதா புண்ணிய நிகழ்வு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில் நடைபெறும். இம்முறை உபசம்பதா புண்ணிய நிகழ்வு, நாரங்வல ஸ்ரீ சுமனகீர்த்தி பிரிவேனா மூலமஹா விஹாரையை மையப்படுத்திய வகையில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும் 22ஆம் திகதி வரை நிகழ்வு நடைபெறவுள்ளது.
அக்காலத்தில், பியகமவில் உள்ள கல்யாணி நதியின் உடகுக்கேப எல்லையில், ஐந்நூறு துறவிகள் உபசம்பதா பெற்றனர்.
அமரபுர ஸ்வேஜின் நிக்காயவின் மஹா நாயக்கர் சங்கைக்குரிய இகுறுவத்தே பியநந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனகல்ல அரஹன்நந்த ரஜமஹா விஹாராதிபதி கலாநிதி பன்வில ஆனந்த, மானெல்வத்த ஸ்ரீ நாகானந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி சங்கைக்குரிய போதாகம சந்திம, தென்கொரியாவின் டொன்குக் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் சங்கைக்குரிய தல்கமுவே தம்மகித்தி, நாரங்வல ஸ்ரீ சுமனகீர்த்தி மஹா பிரிவென மூலமஹா விஹாராதிபதி சங்கைக்குரிய ஊருவல வீனித ஆகிய ஐந்து தேரர்களுக்கு உத்தேச கௌரவ நாம சன்னஸ் பத்திரம், ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கை ராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹா நாயக்கர் மகுலேவே ஸ்ரீ விமல தேரர் தடுப்பூசி வழங்கி, பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி தூரநோக்குடன் செயற்பட்டதாக தெரிவித்தார்.
அந்த வேலைத்திட்டத்தின் பலனாகவே நாட்டில் இவ்வாறான புண்ணிய நிகழ்வை மேற்கொள்வதற்கான சுதந்திரம் கிட்டியதென்றும் மஹா நாயக்க தேரர் சுட்டிக்காட்டினார்.