தமிழ் மக்களின் இனப்பிரச்சினை சார்ந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேரில் சந்திக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற நூலகக் கட்டடத் தொகுதியில், இன்றைய தினம் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில், எமது செய்திப்பிரிவுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இந்தியா உட்பட வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுதல் தொடர்பிலும் தமிழரசுக் கட்சி ஆராய்ந்துள்ளது.
ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் சில முற்போக்கான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டாலும், வடக்கு-கிழக்கு தொடர்பில் சுட்டிக்காட்டத் தவறியிருந்தமை தொடர்பில், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
அண்மையில் வவுனியாவில் ஒன்றுகூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற்குழுவின் தீர்மானத்திற்கமைய, நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் செயற்படுவார் என்றும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஞா.ஸ்ரீசேன் தெரிவித்திருந்தார்.