வெளிநாட்டுக் கொள்கைகளிலும் நாடு இதே போன்று முறையற்ற விதத்தில் செல்லுமாயின் எதிர்காலத்தில் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
2021 சுபீட்சமான ஆண்டாக அமையும் என்று ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் மக்களுக்கு 3 வேளை உண்பதற்குக் கூட உணவு கிடைக்குமா என்பது சந்தேகமாகும்.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் உலக நாடுகள் அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால், இலங்கையில் கொரோனா பாணியை வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
வியத்மக அமைப்பிலுள்ள பலருக்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமைக்குள் நாட்டை சுபீட்சமுடையதாக்க முடியுமா ? முதலீட்டாளர்கள் எவ்வாறு நாட்டில் நம்பிக்கை வைத்து முதலீடுகளை மேற்கொள்வார்கள் ? இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் பலருக்கும் தொழில் வாய்ப்புக்களும் அற்றுப்போயுள்ளன.
இதே போக்கில் வெளிநாட்டு கொள்கைகளிலும் நாடு முறையற்ற விதத்தில் செல்லுமாயின் எதிர்காலத்தில் ஜி.எஸ்.பி. சலுகையும் அற்றுப்போகும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பொருளாதாரம் இவ்வாறு வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்ற நிலையில் சேனா படைப்புழுவும் விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது.
இவ்வாறான நிலையில் 2021 ஆம் ஆண்டிலாவது நாட்டை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது ஒரேயொரு கோரிக்கையாகும் எனத் தெரிவித்தார்.