அமெரிக்க அரச இரகசிய ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்ட பல ஆவணங்கள், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உதவியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வொஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள, கட்டத்திலிருந்து ஒரு தொகுதி ஆவணங்கள் கடந்த நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பான தகவல்கள் இவ்வாரமே வெளியாகின. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர், மேற்படி கட்டடத்தில் ஜோ பைடன் அலுவலகம் ஒன்றைக் கொண்டிருந்தார். மேற்படி ஆவணங்கள், பராக் ஒபாமாவின் கீழ் உப ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி வகித்த காலத்துக்குரியவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாவது இரகசிய ஆவணத் தொகுதி, புதன்கிழமை (11) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க நீதித்திணைக்களம் விசாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்குச் சொந்தமான புளோரிடாவிலுள்ள மார் ஏ லகோ இல்லத்தில் கடந்த வருடம் எவ்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, சுமார் 11,000 இரகசிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், பென் பைடன் மத்திய நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை சுமார் 10 எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்றுமுன்தினம் கூறுகையில், இந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தனது வியப்பளிப்பதாகவும், நீதித் திணைக்களத்தின் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பதாகவும் கூறினார். டொனால்ட் ட்ரம்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஜோ பைடனின் முன்னாள் அலுவலகக் கட்டடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமானவை என்ற போதிலும், இது பைடனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. வெள்ளை மாளிகை உட்பட ஜோ பைடனின் பல இல்லங்கள் மீது எவ்பிஐ எப்போது சோதனை நடத்தப் போகிறது என டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே கேள்வி எழுப்பியுள்ளார்.