நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று (07) இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திலிருந்து மாலை 6:30க்கு தலவாக்கலை நோக்கி புறப்பட்ட தனியார் பஸ்ஸை நானுஓயா பிரதான நகரில் அமைந்துள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி பஸ்ஸில் ஏறியவர்கள் பஸ்ஸில் பின் பகுதியில் வைத்திருந்த சில பயணிகளின் பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய பொருட்களை கொள்ளையிட்டு நானுஓயா கிளாரண்டன் பகுதியில் இறங்கி சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பொருட்களை கொள்ளையடித்தவர்கள் பஸ்ஸின் பின்புற கதவினை உரிய முறை மூடாததினால் சுமார் 200 மீற்றர் தூரம் சென்றதன் பின்னர் குறித்த பஸ்ஸின் பின்னால் வந்த வேனின் சாரதி ஒருவர் பஸ்ஸினை முந்தி சென்று சாரதியிடம் பின்பகுதியில் உள்ள கதவு திறந்து இருப்பதை தெரிவித்துள்ளார் , அதன் பின்னர் பஸ்ஸை நானுஓயா டெஸ்போட் பகுதியில் வீதி ஓரமாக நிறுத்தி சாரதி, நடத்துனர், மற்றும் பயணிகள் இறங்கி பார்த்த போதே அங்கு வைத்திருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட் சம்பவம் தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் அருகில் இருந்த நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தபின்னர் பஸ்ஸில் பொருட்களை வைத்தவர்கள் தங்களுடைய முறைப்பாடுக்களை பதிவு செய்தனர்.
இதில் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா நிருபர்