தப்பிச் சென்ற சந்தேக நபர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு ; அக்குரஸ்ஸவில் சம்பவம்

0
148

அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் நிலையமொன்றை  சுற்றிவளைப்பதற்காக பொலிஸார் சென்றிருந்த போது அங்கிருந்த சிலர் தப்பிச்சென்றுள்ளதுடன் இதன்போதே குறித்த சந்தேக நபர் கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தின் போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் சட்டவிரோத மதுபானத்தையும் பறிமுதல் செய்துள்ளதுடன் பொலிஸார் மீண்டும் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளனர். இருப்பினும் தப்பிச் சென்ற சந்தேக நபர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது. 

 32 வயதுடைய ஒருவரே சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறுகையில்,

இதற்கு முன்னர் இவ்விடத்தில் சட்டவிரோதமான மதுபான உற்பத்தி தொடர்பில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் சட்டவிரோதமான மதுபான உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் பொலிஸார் அங்கு செல்வதற்கு முன்னர் சந்தேக நபர்கள் குறித்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். எவ்வாறாயினும் மதுபான உற்பத்தி செய்தவர் அந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்படவில்லை. 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். தப்பிச்சென்ற சந்தேகநபரே கிணற்றில் இருந்து விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் என்றார்.