பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு – மணலாறு, மணற்கேணிக் கிராமத்தை மீட்டெடுக்க, 40 வருடங்களின் பின்னர் காணி உரிமையாளர்கள் சிலர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மணற்கேணிப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரையில் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.
இந் நிலையில் இவ்வாறு மணற்கேணிப் பகுதியில் காணியுள்ள, காணி உரிமையாளர்கள் ஐவர் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று, தமது காணிகளைத் துப்புரவுசெய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரியிருந்தனர்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த குறித்த காணி உரிமையாளர்கள், மணற்கேணியில் காணி உள்ள ஏனைய காணி உரிமையாளர்களைத் தாம் தேடி வருவதாகவும், அவர்களும் தம்மோடு கைகோர்த்து தமது எல்லைக்கிராமத்தை மீட்டெடுக்க முன்வரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.