Home கட்டுரை தமிழர்களுக்கான மனித உரிமை

தமிழர்களுக்கான மனித உரிமை

0
9

‘எங்கள் உரிமைகள் – எங்கள் எதிர்காலம் – இப்போதே எங்கள் உரிமை’ இதுதான் இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் தின வாசகமாகும். 1948ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம் பத்தாம் திகதி, அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஜக்கிய நாடுகள் பொதுச் சபையால் உள்வாங்கப்பட்டு, பிரகடனம் செய்யப்பட்டது.

அதன் நினைவாகவே ஒவ்வோர் ஆண்டும் டிசெம்பர் மாதம் குறித்த தினம் நினைவு கொள்ளப்படுகின்றது.2009இற்கு பின்னரான ஈழத் தமிழர் அரசியல் நகர்வில் மனித உரிமைகள் என்னும் விடயம் புதிதாக உள்வாங்கப்பட்டது. புதிதாக என்று சொல்வதில் ஒரு விடயமுண்டு – அதாவது, அதற்கு முன்னர் மனித உரிமைகள் என்னும் விடயம் ஈழ அரசியலில் ஒரு விடயமாக இருந்ததில்லை.

ஏனெனில் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடப் புறப்பட்ட எந்தவோர் ஆயுத இயக்கமும் மனித உரிமைகளை மதித்ததில்லை – ஆகக் குறைந்தது ஒரு பொருட்டாகக் கூட எடுத்ததில்லை. ஆனால் இறுதி யுத்தமானது, பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் இறப்பில் முடிவுற்றதைத் தொடர்ந்தே, ஈழ அரசியல் மனித உரிமைக் கோரிக்கையாக உருமாறியது.

கடந்த பதினைந்து வருடங்களாக ஜ.நா.மனித உரிமைகள் பேரவையை அடிப்படையாகக் கொண்டும், அங்கு வெளியாகும் பிரேரணைகளின் உள்ளடக்கத்தைக் கொண்டுமே ஈழ அரசியல் உயிர் வாழ்கின்றது. இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஜக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போர் வலயத்திலிருந்து ஜ.நா. பணியாளர்களை வெளியேறுமாறு கூறிய போது அனைவருமே வெளியேறிவிட்டனர்.

ஓர் அரசு வெளியேறச் சொன்னால் அதன் பின்னர் சர்வதேச முகவர் அமைப்புக்கள் எவையுமே இருக்காது. இதுதான் அவர்களது நடைமுறை. ஜக்கிய நாடுகள் சபை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அனைத்தும் நடந்து முடிந்தது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கைக்கான ஜக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராக இருந்தவர், கோடன் வைஸ் ஆவார்.

இறுதிக்கட்ட யுத்தம் பற்றிய தனது அனுபவங்களை தொகுத்து, ‘கூண்டு’ என்னும் பெயரில், அவர் ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அந்த நூலின் முன்னுரையில், நான் எனது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து எனது அடுத்த நூலுக்கான குறிப்புக்களை எடுத்துக் கொண்டிருக்கின்றேன். என்னைப் போன்ற ஒரு வெளிநாட்டவரை இது போன்ற விடயங்கள் பாதிப்பதில்லை – இது அடிப்படையில் அந்த மக்களுக்கான பிரச்சினையாகும்.

இவ்வளவுதான் ஒரு வெளிநாட்டவரின் எல்லை. இறுதி கட்ட யுத்தத்தின் போது இலங்கை விடயத்தில் ஜக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்தமை தொடர்பிலும் ஓர் அறிக்கை வெளியாகியிருக்கின்றது. அதற்கு தலைமை தாங்கியவரே அதிகம் ஜக்கிய நாடுகள் சபையை நம்பியிருக்காதீர்கள் என்று கூறியிருக்கின்றார். ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு முறை கூறியிருந்தார் – அதாவது, ஜ.நா. மனித உரிமைகள் பேரவையானது, புவிசார் அரசியல் நலன்களாலும் குறுகிய தேசியவாத நலன்களாலும் கட்டுண்டுகிடக்கின்றது – இதற்கு எனது சொந்த நாடான தென்னாபிரிக்கா கூட விதிவிலக்கல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பின்புலத்தில் நோக்கினால் கடந்த பதினைந்து வருடகால மனித உரிமைக் கோஷங்கள் தமிழ் மக்களின் வாழ்வில் சிறிய முன்னேற்றத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. இனியும் ஏற்படுத்துமா என்னும் கேள்வியுடன்தான் நாட்கள் நகர்கின்றன. இந்த விடயத்தில் வெளிநாட்டு முகவர் அமைப்புக்களை நம்பியிருப்பதை விட, இருக்கின்ற வாய்ப்புகள் என்ன என்பதை துல்லியமாக கணித்து, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்கள் அவர்களின் அரசியலில் முன்னோக்கி பயணிக்க முடியும்.