இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானங்களில் எம். ஏ. சுமந்திரன் தொடர்ந்தும் தனித்துச் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒருவராக இருக்கின்றார் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கின்றது. கட்சியின் உத்தியோகபூர்வமான முடிவை அறிவிக்க முன்னரே தமிழ்ப் பொது வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று அவர் சூளுரைத்திருந்தார். அதனை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானம் வெளியாகியிருக்கின்றது. சுமந்திரன் கூறியது போன்றே அதற்கான தீர்மனத்தை நிறைவேற்றியிருக்கின்றார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற சிறீதரனால் தமிழ் அரசுக் கட்சிக்குள் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை என்பதும் தெளிவாகின்றது. கட்சி ஒரு சிலரின் பிடிக்குள் சென்றுவிட்டது – இனி தமிழ் அரசுக் கட்சியை முன்னைய உரிமைசார் அரசியல் கட்சியாக முன்னிறுத்துவது முயல் கொம்பாகவே இருக்கும். சஜித் பிரேமதாஸ அப்படி எதை தமிழ் மக்களுக்காக செய்வதாகக் கூறியிருக்கின்றார் – அரசமைப்பிலுள்ள பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதாக கூறியிருக்கின்றார் – அதிலும், ஓர் உடன்பாடாக எதனையும் அவர் முன்வைக்கவில்லை. எனது வார்த்தைகளை நம்புங்கள் – அதுதான் உடன்பாடு என்கின்றார்.
இதனை நம்பித்தான் தமிழ் அரசுக் கட்சி பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றது. ஆனால் இதே தமிழ் அரசுக் கட்சிதான் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைத் தாண்டி எங்கோ போய்விட்டதாகவும் அதனை தும்புத்தடியாலும் தொடமாட்டோம் என்று கூறியவர்கள். ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் புதிய அரசியல் யாப்பு ஒன்றைக் கொண்டுவரப்போவதாகவும் ‘ஏக்கிய ராஜ்ய’வுக்குள் சமஷ்டி பதுங்கியிருப்பதாகவும் கூறியவர்கள் – அன்றைய சூழலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது.
அதனைக் கொண்டு அரசமைப்பில் இருப்பவற்றையும் ஏற்கனவே பிரேமதாஸவால் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் பெற்றிருக்க முடியும். அன்றைய சூழலில் அதனை வலியுறுத்தியிருந்தால் ரணிலோ அல்லது மைத்திரியோ அதனை முற்றிலும் ஆதரிக்கக்கூடிய சூழல் இருந்தது. பாராளுமன்றத்திலும் முழுமை யான ஆதரவிருந்தது ஆனால் அப்போது புதிய அரசியல் யாப்பு என்னும் மாயமானை நம்புமாறு தமிழ் மக்களை கோரியிருந்த சுமந்திரன் தலைமையிலான தமிழ் அரசுக் கட்சி இப்போது சஜித் பிரேமதாஸ தரும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் இனிக்கும் என்கின்றது.
இதனைத் தமிழ் மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்போகின்றனர்? இதிலுள்ள வேடிக்கையான விடயம் என்னவென்றால் ரணில் – மைத்திரி காலத்தில் முன்வைக்கப்பட்ட புதிய அரசியல் யாப்புக்கான யோசனையை உத்தேச முன்மொழிவை தாங்கள் முன் கொண்டு செல்லப்போவதாக அநுரகுமார திஸநாயக்க கூறுகின்றார். அவ்வாறாயின் அரசியல்ரீதியில் அநுரகுமார திஸநாயக்கவை அல்லவா தமிழ் அரசுக் கட்சி ஆதரித்திருக்க வேண்டும்? ஏன் அவ்வாறு செய்யவில்லை? இதற்கு பின்னாலுள்ள மர்மம் என்ன – இதற்கு பின்னாலுள்ள டீல் என்ன?