தமிழ் கட்சிகள் மக்களைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?

0
226

தையிட்டியில் விகாரை ஒன்றை நிர்மாணித்திருப்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து குறித்த இடத்தில் குழுமியிருக்கின்றனர்.
முதலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இது தொடர்பில் பொலிஸாருடன் முரண்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசு கட்சியினரும் தையிட்டிக்கு சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர்.
யுத்தம் முடிவுற்ற பின்னரான கடந்த 14 வருடங்களாக பௌத்த மயமாக்கல் ஒரு தொடர் அரசியல் பிரச்னையாகவே இருந்து வருகின்றது.
ஒரு விகாரை நிர்மாணிக்கப்படுகின்றது என்றால் அவ்வாறான ஆக்கிரமிப்பு வடிவங்கள் தொடரப் போகின்றன என்பதே அதன் பொருளாகும்.
தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சி வேர்கொண்ட காலத்திலிருந்து அதனைத் தோற்கடிப்பதற்கான இராணுவ வழிமுறையை விஸ்தரித்துவந்த சிங்கள ஆட்சியாளர்கள் மறுபுறம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், விகாரைகளின் மூலம் சிங்கள மேலாதிக்கத்தை நிரந்தரமாக்குவதற்கான திட்டங்கள் கிழக்கில் முஸ்லிம்களை கைக்குள் போட்டுக்கொள்ளுதல் – எனப் பல்வேறு வழிமுறைகளை முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.
ஜே. ஆர். ஜெயவர்த்தன ஒருமுறை சிங்களவர்களை நோக்கிக் கூறியிருந்தார் – அதாவது, நீங்கள் எல்லைகளை நோக்கி செல்லாவிட்டால் எல்லைகள் உங்களை நோக்கிவரும்.
இது அடிப்படையில் ஆட்சியாளர்களுக்கான மாகியவல்லியின் ஆலோசனை.
அதாவது, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவ முகாம்களை நிர்மாணிப்பதல்ல முக்கியம் – இராணுவத்துக்கு விசுவாசமான குடிகளை உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் மாகியவல்லி கூறும் ஆலோசனை என்ன? அரசியல் சூழ்நிலைகள் மாறுகின்றபோது, இராணுவ முகாம்களை அகற்ற நேரிடும் – ஆனால், அவ்வாறான சூழலில் இராணுவத்துக்கு விசுவாசமான குடிகள் அப்படியே இருப்பர்.
உண்மையில், அவர்கள்தான் உண்மையான இராணுவமாவர்.
இந்த ஆக்கிரமிப்பு தத்துவத்தின் அடிப்படையில்தான் சிங்கள ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நகர்வுகளையும் முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு தத்துவத்தின் அடிப்படையில்தான் இராணுவ முகாம்கள் இருக்கின்ற ஒவ்வோர் இடங்களிலும் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
தங்களின் வழிபாட்டுக்கென வைக்கப்படும் சிலைகள், பின்னர் சிறிய விகாரையாக மாறும் – அதன் பின்னர் பெரிய விகாரையாக மாறும்.
இதுதான் மாகியவல்லியின் அணுகுமுறை.
இடதுசாரித்துவம், பாசிசம் பற்றியெல்லாம் வகுப்பெடுத்த முன்னாள் இயக்கங்களின் தலைவர்களுக்கு இந்த சிறிய உண்மை கூடவா புரியவில்லை? இத்தனை வருட அனுபவங்களுக்கு பின்னரும் இதனை தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவில்லை என்றால், இவ்வாறானவர்கள் தொடர்ந்தும் அரசியல்வாதிகளாக இருப்பதில் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மையிருக்க முடியுமா? தையிட்டியில் பௌத்த விகாரையொன்று அமைப்பட்டதாக தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கூச்சலிடுகின்றனர்.
விகாரை நிர்மாணிக்கப்பட்டு கலசம் வைக்க முற்படும்போதுதான், இவர்கள் அந்த இடத்தில் கூடி சத்தமிடுகின்றனர்.
இந்த விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது அரசியல்வாதிகள் என்ன செய்துகொண்டிருந்தனர்? பின்னர் கட்டுமான வேலைகள் முன்னெடுக்கப்பட்டபோது, என்ன செய்தனர்? 2010ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான வேலைகள் முடிவுற்று கலசம் வைக்கப்படும்போதுதான் நமது அரசியல்வாதிகளுக்கு ஆக்கிரமிப்பின் காரம் உறைத்திருக்கின்றது.
ஒருவேளை விகாரைக்கு கலசம் வைப்பது சத்தமின்றி இடம்பெற்றிருந்தால் தையிட்டி விகாரை விவகாரம் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் நினைவிலேயே இருந்திருக்காதுபோலும்.
இவர்களின் அரசியல் பொறுப்புணர்வை என்னவென்பது? சிங்கள ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக ஜனநாயக வழியில் போராடுவதில் தவறில்லை.
போராடுவதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாலுள்ள ஒரேயொரு தெரிவென்றால் அதனை அரசியல்வாதிகள் கையிலெடுப்பதில் தவறில்லை.
ஆனால், விகாரை கட்டுவதை அனுமதித்துக்கொண்டு – விகாரை கட்டும்வரையில் அமைதியாக இருந்துவிட்டு – அதற்கு எதிராக குரலெழுப்புவதானது அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்களின் திட்டங்களுக்கு மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஒப்பானதாகும்.
அத்துடன், வாக்களித்த மக்களை முட்டாளாக்கும் செயலுமாகும்.
மக்களை முட்டாளாக்க எண்ணினால் ஒருநாள் மக்கள் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நல்ல பாடமொன்றை புகட்டக்கூடும்.