தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனரா?

0
148

யுத்தம் நிறைவுற்று 14 வருடங்களாகிவிட்டன.
எத்தனையோ விடயங்கள் பேசியாகிவிட்டது.
2009இல் யுத்தம் நிறைவுற்றதைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தின்போதான அத்துமீறல்கள் பேசுபொருளானது.
உரிமைசார் அரசியல் போராட்டம், நீதிக்கான போராட்டம் என்னும் தோற்றத்தைப் பெற்றது.
2012இல் அமெரிக்க அனுசரணையில் இலங்கைமீதான பொறுப்புக்கூறல் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
தமிழ் மக்களின் அரசியல் விவகாரம் புதியதொரு பரிமாணத்தை பெற்றது.
மனித உரிமைகள்சார் அழுத்தங்கள் இன்றுவரையில் தொடர்கின்றன.
ஆனால், குறிப்பிட்டு சொல்லக்கூடியளவிலான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை.
ஆனால், மறுபுறம் அரசாங்கங்களோ அவற்றின் நிகழ்ச்சி நிரலில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
அரச இயந்திரம் அதன் செயல்பாடுகளை முன்னரைப் போன்றே முன்னெடுத்து வருகின்றது.
இப்போது, ரணில் அதில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒருவர் போன்று காட்சியளிக்கின்றார்.
ஆனால், இது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமேயாகும்.
ரணிலுக்கு பின்னர் அதிகாரத்துக்கு வருபவர் எவ்வாறு நடந்துகொள்வார்? ஏனெனில், அரசியல் மாற்றங்களென்பது தனிநபர்களின்
தலையீடுகளால் ஏற்படுவதல்ல – மாறாகக் கட்டமைப்புசார் மாற்றமாக ஏற்படவேண்டும்.
தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் பலவாறான நம்பிக்கையால் வழிநடத்தப்பட்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒரு கட்சி அல்லது அமைப்பு இவ்வாறான நம்பிக்கைகளின் முகமாக தொழில்பட்டிருக்கின்றது.
ஆனால், செல்வநாயகம் தொடக்கம் சம்பந்தன் வரையிலான காலப்பகுதியில் தமிழ் மக்கள் அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் எதனையும் அடையவில்லை.
இது ஒருபுறம் என்றால் இயக்க அரசியலாலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கம் பலமானதோர் இராணுவக் கட்டமைப்புடன், பேரம்பேசும் பலத்தை நிரூபித்திருந்தபோதும்கூட – அதுவும் இறுதியில் தோல்வியிலேயே முடிவுற்றது.
இந்தப் பின்புலத்தில் நோக்கில் அனைத்து நகர்வுகளிலும் சிங்கள ஆளும் தரப்பே வெற்றிபெற்றிருக்கின்றது.
யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச அழுத்தங்களின் மூலம் சில மாற்றங்கள் நிச்சயம் நிகழுமென்னும் நம்பிக்கை ஊட்டப்பட்டது.
இப்போதும் நம்பிக்கை ஊட்டப்படுகின்றது.
ஆனால், சிங்கள ஆட்சியாளர்களோ இவ்வாறான அழுத்தங்களை அலட்டிக்கொள்ளாமல் தங்களின் கருமங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால், அழுத்தங்களை பிரயோகிப்பதாகக் கூறப்படும் மேற்குலக நாடுகளோ இந்த விடயங்கள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
இந்த இடத்தில் ஓர் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கரிசனையை காண்பிக்கும் வெளித் தரப்புக்கள் அனைத்துதே, பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் சிங்கள
ஆளும் தரப்பையும் அதற்குப் பின்னாலுள்ள மக்களையும் விரோதித்துக் கொள்ளக்கூடாதென்னும் புரிதலோடுதான் ஒவ்வொரு விடயங்களையும்
முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாகவே அவர்களின் அழுத்தங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் செல்வாக்குச் செலுத்தவில்லை.
இதனைப் புரிந்துகொள்ளாமல் சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் அளவுக்கு அதிகமான நம்பிக்கைகளை விதைக்கக்கூடாது.
இன்றைய உலக அரசியல் சூழலில் அரசுகள் பல்வேறு விடயங்களை சுயாதீனமாக முன்னெடுக்கக்கூடிய சூழல் வலுவடைந்திருக்கின்றது.
சிறிய நாடுகள் ஒரே நேரத்தில் பல பலம்பொருந்திய நாடுகளுடன் உறவாடுவதன் ஊடாக ஒன்றின் அழுத்தங்களை இன்னொன்றின் மூலம் தடுக்கும் அல்லது சமநிலைப்படுத்தும் உத்திகளை தாராளமாகவே கையாள முடியும்.
இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறை இந்த அடிப்படையைக் கொண்டதுதான்.
ஆனால், மறுபுறம் இந்த வாய்ப்புகள் தமிழ் மக்கள் போன்ற சிறிய பலவீனமான உணர்வு அரசியலுக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டமொன்றுக்கு இல்லை.
இதனைப் புரிந்துகொண்டு அரசியலை முன்னெடுக்கும் திறமையோடு ஆளுமையோடு நபர்களும் கட்டமைப்புகளும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.
இந்த இடைவெளியில்தான் அனைத்தும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.
இந்த பின்புலத்தில் நோக்கினால் தமிழ் மக்கள் மீது கரிசனையுள்ள தரப்புகளாக தங்களை காண்பித்துக்கொள்வோர்
அனைவராலும் – தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் – என்னும் முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கின்றது.