தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்திற்கு, சுமந்திரன் விடுத்த அழைப்பை நிராகரித்த தலைவர்கள்!

0
113

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில், ஒருமித்த குரலில் ஒன்றிணைக்க, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் ஒன்றுகூடுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நிரகாரித்துள்ளனர். அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்களும், சுமந்திரன் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்து, நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நேற்றைய தினம் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மாத்திரமே கட்சித் தலைவராகப் பங்கெடுத்தார்.
ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் எவரும் கூட்டத்திற்குச் சமூகமளிக்கவில்லை. இந்நிலையில், தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பான வேலைத்திட்டத்தை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராவிடம் ஒப்படைத்த இரா.சம்பந்தன், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடக் கூடியவகையில் பிறிதொரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறும், அந்தக் கூட்டம் எங்கு ஏற்பாடு செய்யப்பட்டாலும், தானும் பங்கெடுப்பதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை நேற்றுக் காலை தினம் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் அடங்கிய குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.