தற்போதைய அரசாங்கத்துக்கு இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆழ்வதற்கு எவ்விதத் தகுதியும் இல்லை- அனுரகுமார திசாநாயக்க

0
158

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவைக்கு இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆட்சிசெய்வதற்கு எவ்விதத் தகுதியும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நான்கு அமைச்சரவை உருவாக்கப்பட்டன.

அதேபோன்று தொடர்ச்சியாக அமைச்சர்களை மாற்றி புதிய அமைச்சர்களை நியமித்தார்.

நிதி அமைச்சை எடுத்துக்கொண்டால் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அலி சப்ரி, கோட்டாபய ராஜபக்ஷ அதேபோன்று தற்போது ரணில் விக்கிரமசிங்க என இதுவரை நிதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே குறுகிய காலத்துக்குள் ஐந்து நிதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

எரிசக்தி அமைச்சை எடுத்துக்கொண்டால் உதய கம்மன்பில, பவித்ரா வன்னியாராச்சி, காமினி லொகுகேவின் வரிசையில் தற்போது காஞ்சன விஜேசேகரவும் இணைந்துள்ளார்.

எனவே அமைச்சர்களையும் தொடர்ச்சியாக மாற்றி அமைச்சுக்களில் தீர்மானம் எடுக்கும் விடயங்களையும் தொடர்ச்சியாக மாற்றி முட்டாள்தனமான செயற்பாட்டில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இதனால் நாடு இன்று பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

எனவே இன்றுவரை அமைச்சுக்கள், அமைச்சின் அலுவலகங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளை மூடுவதே கல்வி அமைச்சின் பொறுப்பாக உள்ளது. வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாத நிலைமையை ஏற்படுத்துவதே சுகாதார அமைச்சின் பொறுப்பாக உள்ளது.

விவசாய அமைச்சர் இருக்கின்றார் ஆனால் விவசாய செய்கைக்கு தேவையான உரம் இல்லை.

அரச நிர்வாக அமைச்சர் இருக்கின்றார் ஆனால் அரச சேவைகள் இன்று முடங்கியுள்ளன. உண்மையில் என்ன நடக்கின்றது.

அமைச்சுக்களும் அமைச்சுகளின் நிறுவனங்களும் தொடர்ச்சியாக பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இல்லாமல் இயங்கும் நிலைமையிலேயே காணப்படுகின்றன.