தவான் அதிரடி ஆட்டம்; பஞ்சாப்பை வென்றது டில்லி!

0
157

தவானின் அதிரடி அரைச்சதம் கைகொடுக்க பஞ்சாப் அணியை 4 விக்கெட்களால் வெற்றி கொண்டது டில்லி கப்பிட்டல்ஸ் அணி.

ஐ.பி.எல். இருபது – 20 தொடரின் 11ஆவது போட்டி நேற்றிரவு மும்பையில் நடந்தது. இதில், கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், ரிஷப் பந்த் தலைமையிலான டில்லி கப்பிட்டல்ஸ் மோதின.

நாணயச் சுழற்சியில் வென்ற டில்லி கப்பிட்டல்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பஞ்சாப்பிடம் கொடுத்தது.

கே.எல். ராகுல் – மயங்க் அகர்வால் இணை தொடக்கம் கொடுத்து. அரைச்சதம் கடந்து அசத்திய, இருவரும் அபாரமான இணைப்பாட்டத்தை ஏற்படுத்தினர். 7 பௌண்ட்ரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 36 பந்துகளில் 69 ஓட்டங்களை குவித்த மயங்க் அகர்வால் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார்.

அடுத்து, அதிரடி வீரர் கெயில் களம் புகுந்த நிலையில், 7 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்ற ராகுல் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. கெயில் 11, நிக்கொலஸ் பூரண் 9 என்று ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்கள இழப்புக்க 195 ஓட்டங்களைப் பெற்றது.

ஹூடா 22 ஓட்டங்களையும், ஷாருக் கான் 15 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

டில்லியின் பந்துவீச்சில், வோக்ஸ், மெரிவல, ரபாடா, ஆவேஸ் கான் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டில்லிக்கு பிரத்திவி ஷா – தவான் இணை, ஓரளவுக்கு சிறப்பான தொடக்கத்தை வழங்கியது. 3 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்களுடன் 17 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்த ஷா ஆர்ஷ்தீப் சிங்கின் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் தவான் நிலைத்து ஆட, ஸ்ரீவன் ஸ்மித் வெறும் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனிடையே அரைச்சதம் கடந்த தவான், ரிஷப் பந்துடன் இணைந்தார். அவர் பந்துகளை பொறுமையாகக் கையாள 13 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 92 ஓட்டங்களைக் குவித்த தவான் றிச்சர்ட்சனின் பந்தில் போல்ட் ஆனார்.

ரிஷப் பந்த் 18ஆவது ஓவரில் விக்கெட்டைப் பறி கொடுத்தார். அவர் 16 பந்துகளில் 15 ஓட்டங்களை அப்போது எடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஸ்ரொய்னிஸூடன் இணைந்தார் யாதவ். ஸ்ரொய்னிஸ் இறுதிநேர அதிரடி காட்டி, 18ஆவது ஓவரின் 2ஆவது பந்தை பௌண்ட்ரிக்கு விரட்ட 198 ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றது டில்லி அணி.

பஞ்சாப்பின் பந்துவீச்சில் றிச்சர்ட்சன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகனாக தவான் தெரிவானார்.