திரியாய் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு : சொந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியவில்லையென காணி உரிமையாளர்கள் ஆதங்கம்!!! : நடப்பது என்ன?

0
15

திரியாய் கிராமமானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இங்கு தமிழர்கள் 531 பேர், சிங்களவர்கள் 274 பேர், முஸ்லிம் ஒருவர் என 806 பேர் வசித்து வருகின்றார்கள். 

வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் திரியாய் வட்டாரத்தில் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் 1987 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் பின்வரும் கிராம சேவகர் பிரிவுகளில் கையகப்படுத்தப்பட்டுள்ள, மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த 2712 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை.

செந்தூர் கிராம சேவகர் பிரிவில் 474 ஏக்கரும் கல்லம்பத்தை கிராம சேவகர் பிரிவில் 636 ஏக்கரும் கட்டுக்குளம் கிராம சேவகர் பிரிவில் 1080 ஏக்கரும் திரியாய் கிராம சேவகர் பிரிவில் 522 ஏக்கருமான காணிகளை விடுவிக்குமாறு கோரி விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் உள்ள 4 இராணுவ முகாம்களுக்காகவும் 3 கடற்படை முகாம்களுக்காகவும் 55 ஏக்கருக்கு மேற்பட்ட மக்களுடைய காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் திரியாய் மக்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வந்த 80 ஏக்கர் காணியும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தினால் 466 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன். திரியாய் கிராமத்தில் உள்ள 2020.08.20 அன்று பதிவு செய்யப்பட்ட பத்மராஜ பபத புராண ரஜமகா விகாரைக்கு பூஜாபூமி மற்றும் அளிப்பு மூலமாக 44.325 ஹெக்டேயர் காணியும், திரியாய் கிராமத்தில் உள்ள 2018.05.30 அன்று பதிவு செய்யப்பட்ட சப்தநாக பபத வன செனசுந்த விகாரைக்கு 2019.07.06 அன்று அளவையிடப்பட்டு அளிப்பு மூலமாக 20.2343 ஹெக்டேயர் காணியும், கல்லறாவ கிராமத்தில் உள்ள 2022.08.20 அன்று பதிவு செய்யப்பட்ட தபசு பல்லுக வனசெனசுன விகாரைக்கு அளிப்பு மூலமாக 2020.12.30 அன்று 2.4598 ஹெக்டேயர் காணியும் ஒதுக்கப்பட்டு அளிக்கப்பட்டது. (2020.10.02 வர்த்தமானி) எனினும் இவற்றை விட மேலதிகமான காணிகளையும் கையகப்படுத்தியுள்ளனர்.

வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினர் திரியாய் பகுதியில் ஏறத்தாழ 2000 ஏக்கரில் எல்லைக் கற்களை போட்டு, அதற்குள் மக்களை செல்ல விடாத ஒரு சூழ்நிலையில், ஆத்திக்காடு பகுதியில் 349 ஏக்கரையும், திரியாய் குள வயலில் 107 ஏக்கரையும், குறுப்பிட்டி கண்டலில் 400 ஏக்கரையும், வேடன்குளத்தில் 310 ஏக்கர் நிலத்தையும் விடுவிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதியான பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் ஆத்திக்காட்டு வெளிப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் காலாகாலமாக விவசாயம் செய்துவந்த 64 ஏக்கரை தனியாகவும், 18 ஏக்கரை தனியாகவும் குச்சவெளி கமநல சேவை நிலையத்தில் தற்காலிகமாக பதிவு  செய்துகொண்டு, மொத்தமாக 82 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். இதில் வைத்தியநாதன் தமயந்திதேவி என்பவருக்கு 5 ஏக்கர் பிரித்தானியர் காலத்து உறுதிக் காணியும் காணப்படுகிறது.

நீண்டகாலமாக பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு செய்கையிடப்பட்டு வருகின்ற விவசாய காணிகளை விடுவிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மக்கள் முறையிட்டதையடுத்து 07.10.2024 அன்று அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆவணங்கள் உள்ள காணிகளில் விவசாயம் மேற்கொள்ளுமாறு அரச அதிபர் பணிப்புரை வழங்கியிருந்தார். 

இக்கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் உட்பட பௌத்த மதகுருமார்கள், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள விவசாயிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

மறுநாள் அப்பகுதியில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடச் சென்றபோது அந்த  விகாராதிபதி விவசாயப் பணிகளுக்கு தடை ஏற்படுத்தியிருந்தார். 

இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 15.10.2024 அன்று குச்சவெளி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடலில் ஆளுநரின் பிரத்தியேக செயலாளரும் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளருமான ராஜசேகர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் உயர் அதிகாரிகள், அரிசி மலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், தங்களுடைய உறுதி காணிகளை பௌத்த மதகுரு ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும் அதனை மீட்டுத் தருமாறும் கோரினர். 

அதனையடுத்து, கருத்து தெரிவித்த பௌத்த மதகுரு, தன்னிடம் 18 ஏக்கர் உறுதி காணியும் 50 ஏக்கர் பூஜா பூமிக்குரிய காணியும் இருப்பதாக கூறியதோடு, அதற்கு மேலதிகமாக இருக்கிற காணியில் பொதுமக்கள் விவசாயம் செய்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்தார். 

அதன் பின்னர், காணி அளக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு சபையில் தெரிவிக்கப்பட்டது. 

வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர், தொல்லியல் துறையினர், கிராம உத்தியோகத்தர் உட்பட ஏனைய அரச அதிகாரிகள் முன்னிலையில் காணி அளவீடு செய்து பௌத்த பிக்குவுக்குரிய பகுதியை வழங்கி ஏனைய பகுதிகளில் மக்களை விவசாயம் செய்யுமாறு சபையில் முடிவு எட்டப்பட்டது. 

அந்த வகையில் மறுநாள் 16.10.2024 அன்று நில அங்கீகாரம் பெற்ற நில அளவையாளரான கணபதிப்பிள்ளை சிவானந்தன் என்பவரினால் நில அளவை செய்யப்பட்டு பௌத்த மதகுருவுக்கு சொந்தமான காணி என கூறப்படுகின்ற 18 ஏக்கர் காணியும், பூஜா பூமி எனும் பெயரில் வழங்கப்பட்ட 50 ஏக்கர் காணியும் அளவீடு செய்து வழங்கப்பட்டு, ஏனைய பகுதிகள் மக்களுடைய விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டன. எனினும், அக்காணிகளில் மீண்டும் விவசாயப் பணிகளில் ஈடுபட பௌத்த மதகுரு தடையாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமன்றி, காலாகாலமாக வழிபட்டு வந்த நாகதம்பிரான் ஆலயத்துக்கு சென்று வழிபடவும் இந்த மதகுரு தடையாக இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.