தட்சண கைலாசம் என்று அழைக்கப்படும் இந்துக்களின் வரலாற்றுத் தொன்மைமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேஸ்வரம் உல்லாசத் துறை அபிவிருத்தி என்னும் பெயரில் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது.
தமிழர் தாயகத்தில் பல இடங்களிலும் தங்களின் ஆக்கிரமிப்பு வேலைத் திட்டங்களை கச்சிதமாக முன்னெடுத்துவரும் தொல்பொருள் திணைக்களமானது தற்போது திருக்கோணேஸ்வரத்தின்மீதும் கண்வைத்துவிட்டது.
இது தொடர்பில் ஆலய பரிபாலன சபையோடு தொடர்புகொண்டு ‘ஈழநாடு’ விடயங்களை ஆராய்ந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த விடயத்தை தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவருகின்றது.
இந்த ஆசிரியர் தலையங்கத்தை எழுதிக் கொண்டிருக்கும்போது, ‘மொட்டு’ அணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அட்மிரல் சரத்வீரசேகரவின் ஆவேச உரை தொடர்பான செய்தியொன்று கண்ணில்பட்டது.
அதாவது, இது சிங்கள- பௌத்த நாடு.
இங்கு தூபிகளை பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெறவேண்டியதில்லை.
அது தொல்பொருள் திணைக்களத்தின் பணியாகும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறானதோர் அச்சுறுத்தும் தொனியில்தான் திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரியும் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையிடம் தெரிவித்திருக்கின்றார்.
எங்களுடைய திட்டங்களை அமுல்படுத்த உங்களின் அனுமதி எங்களுக்கு தேவையில்லை.
ஒரு தகவலுக்காவே இதனை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
ஒரு காலத்தில் தமிழர் தாயகத்தின் தலைநகரமென்று அழைக்கப்பட்ட திருகோணமலையோ இன்று நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியிருக்கின்றது.
திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான இரா. சம்பந்தன், கடந்த இரண்டு வருடங்களாகத் திருகோணமலைக்கு செல்லவில்லை.
இந்த நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில் சிங்கள தரப்புக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து முடிவுகளையும் எவ்வித தடையுமின்றி எடுக்கக் கூடிய நிலையிலிருக்கின்றனர்.
இதற்கப்பால், ஆளுநரின் ஆதரவும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரிகின்றது.
ஆலய பரிபாலன சபை மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, திருகோணமலை அழகான நகரம்.
ஆனால் இன்றோ, இலங்கையிலேயே மிகவும் மோசமான அழகற்ற இடமாக திருகோணமலையே காணப்படுகின்றது என்றவாறு ஆளுநர் தெரிவித்திருக்கின்றார்.
இதன் மூலம் தொல்பொருள் திணைக்களத்தின் திட்டத்தை ஆளுநர் ஆசீர்வதிக்கின்றார் என்பது தெளிவு.
கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை மிகவும் உறுதியாக இந்த விடயத்தை எதிர்க்கின்றது.
அதாவது, அபிவிருத்தியை நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால் ஆலயத்துக்கு சொந்தமான 18 ஏக்கர் காணிக்குள் எவ்வித திட்டங்களையும் அனுமதிக்க முடியாது. இது ஒரு புனித இந்து ஆலயம்.
உல்லாசப்பயணம் என்னும் பெயரில் இதன் புனித தன்மையை சீரழிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாதென்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் அரசியல் பலமில்லாத நிலையில், ஆலய பரிபாலன சபை அச்சமடைந்திருக்கின்றது.
இது வெறுமனே திருகோணமலை இந்து மக்களின் பிரச்னை மட்டுமல்ல.
உலகம் தழுவிவாழும் அனைத்து இந்து மக்களின் பிரச்னையாகும்.
எனவே, இந்த விடயத்தில் அனைவரும் உடனடி கவனத்தை செலுத்து வேண்டும்.
இல்லாவிட்டால் ஒரு வரலாற்று இந்து ஆலயம் திட்டமிட்டு சிதைக்கப்படுவதற்கு நாம் அனைவருமே உடந்தையாக இருக்கின்றோம் என்னும் வரலாற்று பழியே மிஞ்சும்.
வழமையாக தொல்பொருள் இடங்களை பாதுகாத்தல் என்னும் அடிப்படையில் தலையீடுகளை மேற்கொண்டுவந்தவர்கள், இப்போது, நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, உல்லாசத்துறை அபிவிருத்தி என்னும் பெயரில் திருக்கோணேஸ்வர
ஆலய எல்லைக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.