தேசிய சபை தொடர்பிலான யோசனையில் பாரிய வேறுபாடுகள்: பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க

0
124

எதிர்க் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட தேசிய சபை தொடர்பிலான யோசனைக்கும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய சபையை உருவாக்குவது தொடர்பிலான யோசனையை எதிர்க்கட்சியே கொண்டுவந்ததாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

ஆம், கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை, பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு தேசிய சபையை உருவாக்குவது தொடர்பிலான கலந்துரையாடலில் எதிர்க் கட்சிகள் ஈடுபட்டன.

விசேடமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் யோசனையை முன்வைத்தது.

எனினும் அன்று அந்த கலந்துரையாடலின்போது முன்மொழியப்பட்ட தேசிய சபையும் அதன் நோக்கமும் தற்போது சபையில் முன்வைக்கப்பட்ட தேசிய சபை தொடர்பிலான முன்மொழிவு, நோக்கமும் வௌ;வேறானவை.

எதிர்க் கட்சிகள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது முன்வைக்கப்பட்ட தேசிய சபையை உருவாக்கல் தொடர்பிலான விடயத்தில் பிரதான காரணங்கள் பல முன்வைக்கப்பட்டு இருந்தன.

அதில் ஒன்று இடைக்கால அரசாங்கம் தொடர்பிலான யோசனை. இடைக்கால அரசாங்கத்தை ஆரம்பிப்பது தொடர்பிலான யோசனை முடிவு திகதியும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

எனினும் தற்போது இந்த சபையில் முன்வைக்கப்பட்ட தேசிய சபை தொடர்பிலான முன்மொழிவில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படவில்லை.

தற்போது அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டு முடிந்துவிட்டது. ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக்கு மேலாக இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் வாரத்தில் மேலும் பல அமைச்சர்களை நியமிப்பதற்கும் தீர்மானித்துள்ளனர்.