தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின், எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

0
183

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின், நடப்பு மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், இன்று நடைபெற்றது.

கொழும்பு இரத்மலானையில் உள்ள, நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் இடம்பெற்ற, கொடையாளர் இணைப்புக் கூட்டத்தில், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, யு.என்.டி.பி, ஏ.எப்.டி, ஜே.ஐ.சி.ஏ ஆகியவற்றின் பிரதிநிதிகளும், அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதன் போது, நீர் வழங்கல் அமைச்சினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள், முன்னெடுக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாக, விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், வெளிநாட்டு உதவித் திட்டங்கள் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரச் சபை தலைவர் நிஷாந்த ரணதுங்க வரவேற்புரை நிகழ்த்தி, நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பில், அமைச்சர் ஜீவன் தொண்டமான், கொடையாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அதன் பின்னர், சவால்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் உட்பட பல தலைப்புகளின் கீழ், விளக்கமளிப்புகளும், கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.