நாட்டில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தல், சங்கக் கூட்டுத்தாபனத்தின் வீழ்ச்சி மற்றும் இலங்கை வரலாற்றைத் திரிபுபடுத்துவதை தடுப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பது தொடர்பில் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இவ்வொன்றியம் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவுறுத்தி இருந்தாலும் அது தொடர்பில் இதுவரை போதியளவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.
பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தல், சங்கக் கூட்டுத்தாபனத்தின் வீழ்ச்சி மற்றும் இலங்கை வரலாற்றைத் திரிபுபடுத்துவதை தடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுவருவது மற்றும் அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பது தமது ஒன்றியத்தின் நோக்கமாகும் என சமரவீர சுட்டிக்காட்டினார்.

திரிபுபடுத்தப்பட்ட தகவல்களைக் கொண்ட புத்தகங்களை பிரபல்யப்படுத்துவதால் பௌத்த தர்மம் பற்றிய தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவி வருவதாகவும் தேரர்கள் சுட்டிக்காட்டினர்.இதற்கு மேலதிகமாக, பௌத்த தர்மம், புத்தரை இழிவுபடுத்தும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தரப்பினர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு பாரியளவு பணபலத்தைப் பயன்படுத்தி இந்த செயற்பாட்டை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டதுடன், இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.