முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது, ‘தங்கப் பாதை’ முனையத்தின் சேவைகளை பயன்படுத்தியதற்காக செலுத்த வேண்டிய 60 ஆயிரம் ரூபாயை சிவில் வானூர்தி சேவைகள் அதிகார சபையினர் பின்னர் செலுத்தினர் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பியபோது, இந்த சேவை வழங்கப்பட்டாலும் நேற்று முன்தினமே பணத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து நாடு திரும்ப பஸில் ராஜபக்ஷவை வரவேற்க ‘தங்கப் பாதை’ முனையத்துக்கு பொதுஜன பெரமுன கட்சியின் நூற்றுக்கும் அதிகமான உறுப்பினர்கள் சென்றிருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டி வகைகளுக்கே இந்த பணம் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.