நாட்டில் ஏமாற்று அரசியல்களை தயாரிக்கின்றனர்: சஜித் காட்டம்

0
100

நாட்டின் வாழ்வாதாரம் சீர்குலைந்து, பொருளாதாரம் வங்குரோத்தாகியுள்ள இந்த நேரத்தில், சில தரப்பினர் ஏமாற்று அரசியல் நாடகங்களை தயாரித்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்

வரவு செலவுத் திட்டத்திற்கும், வற் வரியை அதிகரிப்பதற்கும் ஆதரவாக வாக்களித்து விட்டு, அதிபரைப் பாதுகாத்துக் கொண்டும், வரிச் சுமையை மக்களின் தோள்களில் சுமத்த வேண்டாம் என பின்னர் அறிக்கைகளை வெளியிடுவதே அண்மைய நாட்களில் பெரும் நகைச்சுவையான விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நுகேகொடை புனித ஜோசப் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

“வற் வரியை அதிகரிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது நாட்டை வங்குரோத்தடையச் செய்த குடும்ப ஆட்சியின் ஒரு தரப்பினர் அதற்கு வாக்களிக்காமல், மக்கள் பக்கம் முன் நிற்பதாக பாசாங்கு செய்தாலும், தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்கள் வற் வரியை அதிகரிக்க ஆதரவாக வாக்களித்தனர்.

நாட்டையே வங்குரோத்தாக்கி, நாட்டை நாசமாக்கிய இவர்கள், ஏமாற்றுத் தனமான செயற்பாடுகள் மூலம் மக்கள் அவதானங்களை திசை திருப்ப மீண்டும் முயற்சித்து வருகின்றனர். இவர்களின் இந்த போலியான செயற்பாடுகளை கண்டு ஏமாற வேண்டாம்.

நாட்டை வங்குரோத்தாக்கிய இவர்களுக்கு வரிச்சுமை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை, இதுபோன்ற மோசடிக்கார நபர்களின் கதைகளை நம்பி ஏமாறாதீர்கள். நாட்டையே அழித்த இந்தக் குடும்பத்தை மையப்படுத்தி ஊழல் ஒழிப்பு வரி விதிக்கப்பட வேண்டும்.இந்நாடு முதலாளித்துவ மேட்டுக் குடி வர்க்கத்திற்கு மட்டுமுரிய நாடு அல்ல, 220 இலட்சம் மக்களுக்கும் சொந்தமான நாடு.

நாட்டின் எதிர்காலமாக விளங்கும் நாட்டின் பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது போலவே அதிபர்  உட்பட அரசாங்கத்திற்கும் உண்டு. 

பாடசாலை மாணவர்கள் சாப்பிடாமல் மயங்கி விழுந்தாலும் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் சாப்பிடாமல் மயங்கி விழுவதில்லை.

பாடசாலை மாணவர்கள் இவ்வாறானதொரு அவல நிலைக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில், மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினராலும் இதனை புறக்கணிக்க முடியாது” என  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.