”நாமலுக்கு சட்டத்தில் தெளிவு இல்லை!”

0
14

தனியறையில் இருந்து சட்டக்கல்லூரி இறுதி பரீட்சையை எழுதிய நாமல் ராஜபக்ச  முதலில் சட்ட ஏற்பாடுகளைத் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் சட்ட ரீதியிலான தர்க்கங்களை முன்வைக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள்  பிரதி அமைச்சர்  சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) அன்று இடம்பெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது  தொடர்பான  விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  பேசுகையில்,
 
குற்றவாளியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவதற்கு 2002ஆம் ஆண்டு 05ஆம் இலக்க  அலுவலர்களை அகற்றும் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அது சட்டவிரோதமானது, பாராளுமன்ற நிலையியல் கட்டளை மீறப்பட்டுள்ளது என்று  நாமல் ராஜபக்‌ஷ எம்.பி. வாதிடுகின்றார்.

தந்தைக்கும், சித்தப்பாவுக்கும் ஏற்றாற்போல்  தீர்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் பிரதம நீதியரசர்   சிரானி பண்டாரநாயக்க  சட்டவிரோதமான முறையில்  பதவி நீக்கப்பட்டதை நாமல் ராஜபக்‌ஷ அறியாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது.

சட்டவிரோதமான முறையில்  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பான விவாதம் நடத்தப்படுவதாக  நாமல்  ஷ குறிப்பிடுகிறார்.  தேசபந்து  தென்னக்கோனின் துர்நடத்தை தொடர்பில் தான் 2002 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க  அலுவலர்களை அகற்றும்  சட்டத்தின்  பிரகாரம்  நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த விடயத்தைப்  பாராளுமன்றத்தில்  விவாதிப்பதால்  நீதிமன்ற    விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று  சிறப்புக்குழு அறிக்கை  சமர்ப்பித்துள்ளது.

தனியறையில் இருந்து சட்டக் கல்லூரி இறுதி பரீட்சையை எழுதிய நாமல்  முதலில் சட்ட ஏற்பாடுகளை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் சட்ட ரீதியிலான தர்க்கங்களை முன்வைக்க வேண்டும்.சிறுபிள்ளைத்தனமாக பேசக்கூடாது என்றார்.