நீதிபதிகள் உள்ளிட்ட தரப்பினரின் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் – சஜித் பிரேமதாச!

0
11

நீதிபதிகள், சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.

நீதிபதிகளின் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களுக்கு மத்தியில், நீதிபதிகளின் பாதுகாப்பைத் திரும்பப் பெற வேண்டாம் என்றும், அவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இன்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

நீதிபதிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த சஜித் பிரேமதாச,

அதிகரித்து வரும் குற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்றும், மாறாக அவர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றிய சஜித் பிரேமதாச,

“நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் நீதிபதிகளின் பாதுகாப்பு நீக்கப்படும் என எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சிவில் சமூகத்தினருக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. ஊடகவியலாளர்களே இந்த மாதிரியான விடயங்களை அதிகமாக வெளியிடுகின்றார்கள்.

அவர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றன. நீதிமன்ற உத்தரவில் ஊடகவியலாளர் ஒருவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது.

அதனால் நீதிபதிகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் உட்பட அனைத்து மக்களுக்கும் வழங்கும் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நேற்று நடந்த சம்பவம் தொடர்பில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.

இதேவேளை நீதிபதிகளின் பாதுகாப்பை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்