நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை

0
116

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னர் பார்வை பாதிப்புக்குள்ளான 15 பேர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்க பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட 10 பேர் கொண்ட விசேட வைத்திய நிபுணர்கள் நேற்றுநுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த விசேட வைத்திய நிபுணர் குழுவில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எஸ்.கே.ரத்நாயக்க, வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

கடந்த மே மாதம் முதல் பகுதியில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பலருக்கு கண் சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 15 பேருக்கு கண்பார்வை மீள் திரும்ப குறைப்பாடுகள் ஏற்பட்டு அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதேபோல நுவரெலியாவிலிருந்து 15 பேர் மற்றும் கொழும்பில் கண் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 40 பேருக்கு சிகிச்சையின் பின் கண்ணுக்கு ஊற்றப்பட்ட மருந்தினால் கண்பார்வை திரும்பாத பிரச்சினை பேசும் பொருளாக மாற்றம் பெற்றிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது. இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய அரசாங்கம் பாராளுமன்றில் அமைச்சரவை அங்கீகாரம் பெற்று பத்து பேர் கொண்ட விசேட வைத்திய நிபுணர்கள் குழுவை நியமித்து சுகாதார அமைச்சுக்கு அறிக்கை சமர்பிக்க பணிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் கண் பார்வை குறைப்பாட்டிக்கு உள்ளான பாதிக்கப்பட்ட நோயாளர்களை சந்தித்து விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்த நிபுணர் குழு  ஈடுப்பட்டிருந்தது.

அதன் ஒரு விசாரணைக்காக நுவரெலியாவில் கண்பார்வை பாதிக்கப்பட்ட 15 பேரிடம் திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரத்னவின் வழிகாட்டலின் கீழ் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின்படி நிறுவப்பட்ட விசேட குழு விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, சத்திர சிகிச்சைக்கு பின் கண்பார்வை பலவீனமடைந்துள்ள நோயாளர்கள் விசேடமாக வரவழைக்கப்பட்டு விசாரணைகள் செய்யப்பட்டது.

அத்துடன், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பெறப்பட்ட அறிக்கைகள் சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கத்திற்கு வழங்கப்படவுள்ளதாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்  ஆர்.எம்.எஸ்.கே.ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட கண் மருந்தினை பாவித்ததால் கண்பார்வை குறைப்பாடு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்  நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் என அவர்  தெரிவித்தார்.