பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சேவை புரியும் சுகாதார திணைக்களம் : வடக்கு மாகாண ஆளுநர்

0
13

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தம்மால் முடிந்தளவு சிறப்பான சேவையை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றமைக்கு சுகாதாரத் திணைக்களத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சுகாதார சேவையினரின் நியாயமான கோரிக்கைகளுக்கு முடியுமான வரையில் விரைவாக தீர்வுகளைப் பெற்றுத்தருவதாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழான மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பொது மருத்துவமனைப் பணிப்பாளர்கள், ஆதார மருத்துவமனைப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று காலை இடம்பெற்றது.

முன்னைய ஆளுநரின் காலத்தில் ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களுக்கு விண்ணப்பம் கோரி பெறப்பட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பெரும் நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலேயே சேவைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார். மாவட்ட பொதுமருத்துவமனையில் போதுமான விடுதிகள் இல்லை என்பதையும் அவர் ஆளுநருக்கு எடுத்துரைத்தார்.

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாவட்ட பொது மருத்துவமனையின் பணிப்பாளர் ஆகியோர் ஆளணிப்
பற்றாக்குறை தொடர்பில் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

மருத்துவமனைப் பணியாளர்களுக்கான விடுதிப்பற்றாக்குறை தொடர்பிலும் சுட்டிக்காட்டினர்.

இதற்கு மாற்று ஒழுங்காக பளையில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளைப் பயன்படுத்த மாகாண சுகாதரப் பணிப்பாளர் விடுத்த கோரிக்கைக்கு ஆளுநர் சாதகமான பதிலை வழங்கினார்.

மன்னார் மாவட்ட பொதுமருத்துவமனையின் பணிப்பாளர், மருத்துவமனைக்கு விடுதி வசதி அவசரமாகத் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டியதுடன் இது தொடர்பில் கடந்த காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை நிறைவேற்றப்படவில்லை என ஆளுநருக்கு எடுத்துரைத்தார்.

மருத்துவமனைக்கு கணக்காளர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு பணிப்பாளர் முன்வைத்த கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதம செயலாளரை ஆளுநர் பணித்தார்.

மன்னார் மாவட்ட மருத்துவமனையை கஷ்டப் பிரதேச மருத்துவமனை என்ற பிரிவுக்குள் இருநது விடுவிக்குமாறும் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்தார்.
வவுனியா மாவட்ட பொதுமருத்துவமனைக்கும் ஆளணி தேவைப்பாடுகள் இருப்பதாக பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வவுனியா மாவட்டத்திலுள்ள 8 பிரதேச மருத்துவமனைகளுக்கு தாதிய வெற்றிடங்கள் உருவாக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதனை உருவாக்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப் பகுதிகளுக்கான அம்புலன்ஸ் படகின் தேவைப்பாடு தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
கோரிக்கை முன்வைத்தார்.
மேலும் சாரதிகளுக்கான தேவைப்பாடு அதிகம் இருப்பதாகத் தெரிவித்த பணிப்பாளர், சில சாரதிகள் முன்னறிவிப்பின்றி திடீரென பணியை விட்டு விலகுவதால் இந்த நெருக்கடி அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சில மருத்துவமனைகளில் அம்புலன்ஸ் இருந்தாலும் சாரதிகள் இல்லாத நிலைமை இருப்பதாகத் தெரிவித்தார்.

ஒப்பந்த அடிப்படையில் அவர்களை உள்ளீர்ப்பது தொடர்பில் ஆராயுமாறு பிரதம செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.

மருந்து விநியோகிப்பதற்குரிய ஆளணிகளின் பற்றாக்குறை தொடர்பிலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

மருந்து விநியோகிப்பவர்களுக்கான பயிற்சிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஊர்காவற்றுறை மருத்துவமனைக்கு நோயாளர்கள் வருவதற்குரிய போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்டது.

வடக்கில் ஆளணிப்பற்றாக்குறை நிலவும் நிலையில் சில மருத்துவமனைகளுக்கு நியமிக்கப்படும் மருத்துவர்களில் சிலர் முழுமையாக அங்கு பணியாற்றுவதில்லை எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார்.

4 மருத்துவர்கள் மருத்துவமனைக்கு நியமிக்கப்பட்டால் இருவர் மாத்திரம் ஒரு வாரம் கடமையிலிருப்பர் எனவும் எஞ்சிய இருவரும் விடுமுறையில் செல்கின்றனர் எனவும் குறிப்பிட்ட பணிப்பாளர், இதனால் கடமையிலிருப்பவர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.