பிரித்தானிய இளவரசி ஆன், சிறு காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று அறிவித்துள்ளது.
73 வயதான இளவரசி ஆன், மன்னர் 3 ஆம் சார்ள்ஸின் இளைய சகோதரி ஆவார். தனது கேட்கோம் பார்க் எஸ்டேட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்பவமொன்றில் அவர் காயமடைந்தார் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிஸ்டல் நகரிலுள்ள சௌத்மேட் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவம் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
அவர் தொடர்பான தகவல்கள் மன்னர் சார்ள்ஸுக்கு தெரிவிக்கப்பட்டு வருவதாகவும். அவர் விரைவில் குணமடைவதற்கான நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மன்னரும் அரச குடும்பத்தினருடன் இணைந்துள்ளார் எனவும் அரண்மனை தெரிவித்துள்ளது.
இளவரசி ஆன் எவ்வாறு காயமடைந்தார் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.எனினும், குதிரை தொடர்பானது என சந்தேகிக்கப்படும் சம்பவமொன்றினால் இளவரசி ஆனின் தலையில் சிறு காயமும் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அவருக்கு ஏற்பட்ட காயமானது குதிரையின் தலை அல்லது காலின் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய காயத்தை ஒத்திருப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இளவரசி இவ்வார இறுதியில் கனடாவுக்கு பயணம் செய்யவிருந்தார். தற்போது அவ்விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இளவரசி ஆன், குதிரையோட்டத்தில் தேர்ச்சி பெற்றவர். மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவிலும் அவர் குதிரையில் வந்தமை குறிப்பிடத்தக்கது.