ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடுகளிலுள்ள போதாமைகள் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் தலையீடுகளிலுள்ள போதாமைகள் தொடர்பில் கடந்த 13 வருடங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு தமிழ்
அரசியல்வாதிகளும் புலம்பெயர் அமைப்புகளும் கேள்வி எழுப்பியிருக்கின்றன.
மறுபுறம் ஐ. நாவோ – அனைத்தையும் கேட்டும் கேட்காமல் இருப்பதும் நமக்கு புதிதல்ல.
ஐ. நாவின் தலையிடும் அதிகாரத்திலுள்ள மட்டுப்பாடுகளை அறிந்தவர்களுக்கு இதில், எந்தவோர் ஆச்சரியங்களும் இல்லை.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னைநாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே ஐ .நா. மனித உரிமைகள் பேரவையின் இயலாமைகள் தொடர்பில் பேசியிருக்கின்றார்.
கனடாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, ஐ. நா. மனித உரிமைகள் பேரவையானது புவிசார் அரசியல் போட்டிகளாலும் குறுகிய தேசியவாத நலன்களாலும் கட்டுப்படுத்தப்படும் ஓர் இடமாகும்.
இதற்கு தனது சொந்த நாடான தென்னாபிரிக்காவும் விதிவிலக்கல்ல என்றும் குறிப்பிடடிருந்தார்.
நவநீதம்பிள்ளை ஆணையாளராக இருந்தபோது, இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது, திருகோணமலையில் இடம்பெற்ற சிவில் சமூக சந்திப்பொன்றின் போது, ஐ. நா. மனித உரிமைகள் பேரவையென்பது ஐக்கிய நாடுகள் சபையல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது யுத்த வலயத்துக்குள் அகப்பட்டிருந்த மக்களைப் பாதுகாப்பதில் ஐ.நா. காத்திரமான தலையீடுகளை செய்யவில்லை என்பது இரகசியமான ஒன்றல்ல.
அப்போது, ஐ. நாவின் செயலாளர் நாயகமாக இருந்தவரான பான் கீ மூனின் பரிந்துரைக்கு அமைவாக, சார்ள்ஸ்பெரி தலைமையில் இடம்பெற்ற உள்ளக ஆய்வறிக்கையில், ஐ. நாவின் தோல்வி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
30 பக்கங்களை கொண்ட குறித்த அறிக்கையானது இறுதி யுத்தத்தின்போது, ஐ.நா ‘கட்டமைப்பு சார்ந்து’ தோல்வியுற்றதாக வாதிட்டிருந்தது.
அரசாங்கத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, 2008இல், யுத்த வலயத்திலிருந்து ஐ.நாவின் பணியாளர்கள் அனைவரும், மக்களை கைவிட்டு வெளியேறினர்.
இது தவறானதோர் அணுகுமுறையென்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐ. நா. பணியாளர்களின் வெளியேற்றமானது ராஜபக்ஷக்களின் மிலேச்சத்தனமான அழித்தொழிப்புகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பானது.
சாட்சியமற்ற யுத்தமொன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பை கோட்டாபயவுக்கு வழங்கியது.
இந்த விடயங்கள் மூலம், ஐ. நாவின் பொறுப்பற்ற செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.
ஆனால், இது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே இடம்பெற்ற விடயமல்ல.
மாறாக, ஐ. நாவின் தோல்விகள் இதற்கு முன்னரும் வேறு சில சந்தர்ப்பங்களிலும் அம்பலப்பட்டிருக்கின்றன.
ருவாண்டா இனப்படுகொலையின்போது, குவாட்டமாலா படுகொலைகளின் போதும், ஐ. நாவினால் மக்களை பாதுகாக்க முடியவில்லை.
இன்று நிலைமைகள் இன்னும் சிக்கலடைந்திருக்கின்றன.
உலகம் பல துருவங்களாக உடைவுற்றிருக்கும் சூழலில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான உலகளவிலான கரிசனைகள் பலவீனமடைந்திருக்கின்றன.
புவிசார் அரசியல் போட்டியின் காரணமாக, மோசமான மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடும் நாடுகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் சில நாடுகள் ஈடுபடுகின்றன.
சர்வதேச அரங்குகளில் இலங்கையை நியாயப்படுத்தும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருகின்றது.
இது மேற்படி புவிசார் அரசியல் நெருக்கடியின் விளைவாகும்.
இந்த பின்புலத்தில் நோக்கினால், ஐ. நாவின் தலையிடும் ஆற்றல் முன்னரைவிடவும் பலவீனமடைந்திருக்கின்றது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமைகள் தொடர்பில் உறுதியான கரிசனைகளை காண்பிக்கும் போது, மேற்குலகுடன் மோதும் போக்கைக் கொண்டிருக்கும் சீனா, ரஷ்யா, இவற்றுடன் உறவைப் பேணிவரும் நாடுகள் சிலவும் மேற்குலக மனித உரிமைகள் தலையீடுகளில், தலையீடு செய்துவருகின்றன.
மனித உரிமைகளை மீறும் அரசுகள், இதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்கின்றன.