புத்தளம் – மஹகும்புக்கடவல கவயன்குளம் பகுதியில், தோட்டம் ஒன்றில் இருந்து, நேற்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. 33 ஏக்கர் பரப்பளவில் உள்ள, மா மரத் தோட்டம் ஒன்றில், கண்டெய்னர் பெட்டிக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவித்தனர். மாமரத் தோட்டத்தில் பணிபுரிந்த மஹவ பகுதியைச் சேர்ந்த, 56 வயதுடைய நபர் ஒருவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சடலத்தின் தலைப் பகுதியில் அடி காயங்கள் காணப்படுவதாக, பொலிஸார் குறிப்பிட்டனர். தோட்டத்தின் கண்டெய்னர் பெட்டிக்குள், சடலமொன்று கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டனர். மா மரத் தோட்டத்தில் வேலை செய்யும் மூவர், நேற்று இரவு, குறித்த கண்டெய்னர் பெட்டிக்குள் இருந்துகொண்டு மது அருந்தியதாகவும், அதன் பின்னர், அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மூவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அம்மூவரில் ஒருவர், இவ்வாறு அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், சடலமாக மீட்கப்பட்ட நபருடன் இணைந்து, நேற்று இரவு மது அருந்தியதாக தெரிவிக்கப்படும் ஏனைய இருவரும், சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் சடலம், நீதிவான் விசாரணையின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக, புத்தளம் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில், மஹகும்புக்கடவல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குமார தலைமையில், குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.