மகளிர் ரி20 உலகக் கிண்ண பி குழுவில் தென் ஆபிரிக்காவை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது இங்கிலாந்து

0
48

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை  (07) நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண பி குழுப் போட்டியில் நின்று நிதானித்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 2ஆவது நேரடி வெற்றியை ஈட்டிய இங்கிலாந்து, பி குழுவுக்கான அணிகள் நிலையில் முதலிடத்திற்கு முன்னேறி அரை இறுதிக்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 125 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முதல் இரண்டு ஓவர்களில் 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆனால், அதன் பின்னர் ஓட்ட வேகம் அதிகரித்ததுடன் டெனி வியட் ஹொஜ், நெட் சிவர் ப்றன்ட் ஆகிய இருவரினதும் திறமையான துடுப்பாட்டம் இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தது.

ஆரம்ப வீராங்கனை மாலா பௌச்சர் (8) ஆட்டம் இழந்தபோது இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 16 ஓட்டங்களாக இருந்தது.அதன் பின்னர் டெனி வியட் ஹொஜ், அலிஸ் கெப்சி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் தெம்பூட்டினர். அலிஸ் கெப்சி 19 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து  டெனி வியட் ஹொஜ், நெட் சிவர் ப்றன்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 55 பந்துகளில் பகிர்ந்த 64 ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு வெற்றியை அண்மிக்க உதவியது. டெனி வியட் ஹொஜ் 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 11 ஒட்டங்களை நெட் சிவர் ப்றன்ட் பெற்றுக்கொடுத்தார். நெட் சிவர் ப்றன்ட் 36 பந்துகளில் 6 பவுண்டறிகள் உட்பட 48 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.

தென் ஆபிரிக்காவின் முன்வரிசை வீராங்கனைகள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியபோதிலும் ஓட்டவேகம் போதுமானதாக அமையவில்லை. அணித் தலைவி லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தஸ்மின் ப்றிட்ஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து லோரா வுல்வார்ட் மேலும் 40 ஓட்டங்களை இரண்டாவது விக்கெட்டில் ஆனேக் பொஷ்ஷுடன் பகிரந்தார். ஆனால், ஆனெக் பொஷ் 18 ஓட்டங்களுடனும் லோரா வுல்வார்ட் 42 ஓட்டங்களுடனும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

மத்திய வரிசையில் மார்ஸ்ஆன் கெப் 17 பந்துகளில் 26 ஓட்டங்களையும் ஆனெரி டேர்க்சன் 11 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் சொபி எக்லஸ்டோன் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 வீழ்த்தினார்.