மக்கள் விரும்பும் தீர்மானங்களை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது- வாசுதேவ நாணயக்கார

0
105

மக்கள் விரும்பும் தீர்மானங்களை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறுவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் விரும்பும் தீர்மானங்களை எம்மிடம் எதிபார்க்க வேண்டாம் என்று கடந்த பாராளுமன்ற அமர்வில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்திருந்தார்.

பொறுப்புவாய்ந்த பதவியில் இருந்துகொண்டே அவர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

மக்கள் தீர்மானம் என்பது உண்மையில் என்ன? நாட்டு மக்களில் அதிகளவானோர் விரும்பும் தீர்மானமே மக்கள் தீர்மானமாகும்.

எனவே மக்கள் விரும்பும் தீர்மானங்களை இந்த அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க வேண்டாம் என்பதன் அர்த்தமெனில் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுக்காது என்பதேயாகும்.

நாட்டில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் பதவிக்கு வந்த இந்த அரசாங்கம் மக்கள் விரும்பும் தீர்மானங்களை எடுக்க தவறுமாயின் வீட்டுக்கு செல்ல வேண்டும்.

தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு அவர்களுக்கு வரமொன்றும் அளிக்கப்படவில்லை.

நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து தீர்மானங்களை எடுக்க வேண்டியது, செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் எவ்வாறு இவ்வாறு கருத்து தெரிவிக்க முடியும்.

மக்கள் விரும்பும் தீர்மானங்களை இந்த அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்று கூறுவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடாகும்.

இரட்டை பிராஜாவுரிமை நீக்கப்பட்டமைக்காக மட்டுமல்ல பல்வேறு நல்ல விடயங்கள் 22ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளடங்குகின்றன. இவற்றை அடிப்படையாக வைத்தே 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப்பட்டது.