நியூசிலாந்து அணியுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் 63 ஓட்டங்களினால் வெற்றியீட்டிய இலங்கை அணி நியூசிலாந்துடன் 5 ஆண்டுகளின் பின்னர் வெற்றியை பதிவு செய்தது.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகிய முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸூக்காக 305 ஓட்டங்களை சேர்த்தது. துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் தனது நான்காவது சதம் கடந்து 114 ஓட்டங்களை அதிகபட்சமாக குவித்தார். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 340 ஓட்டங்களை மொத்தமாக பெற்றது.
அதன் அடிப்படையில் 35 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிஸை தொடர்ந்த இலங்கை அணி திமுத்தின் 83 ஓட்டங்கள், சந்திமாலின் 61 ஓட்டங்கள், மெத்யூஸின் 50 ஓட்டங்கள் உதவியுடன் இலங்கை அணி 309 ஓட்டங்களை சேர்த்து. அதன் அடிப்படையில் நியூசிலாந்து அணியின் வெற்றி இலக்காக 275 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
குறித்த இலக்கை நோக்கி துடுப்படுத்திய நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களை பெற்றிருந்தது. நேற்று போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தொடர்ந்த நிலையில் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து இரு விக்கெட்களை இழக்க இலங்கை அணி 63 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.