மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில், மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த காட்டு யானைகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் எடுத்த துரித முயற்சியால் விரட்டப்பட்டன. நேற்று மாலை கொக்கட்டிச்சோலை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அங்குள்ள உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார். அந்தநேரத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குரிய வாகனத்தினை செலுத்துவதற்கு சாரதிகள் இல்லாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் இரு உத்தியோகத்தர்கள் அழைத்துச்செல்லப்பட்டு கொக்கட்டிச்சோலைப்பகுதிக்குள் வந்த யானைகள் துரத்தப்பட்டன.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டாரவினை தொலைபேசியில் தொடர்புகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், அலுவலர்களின் தேவை, ஆளணித் தேவை, வாகனத் தேவை சாரதிகளின் தேவை தொடர்பிலும் தெரியப்படுத்தினார்.