மல்கம் ரஞ்சித்தின் தார்மீகம்?

0
212

வரலாற்று ரீதியாக இலங்கை இழைத்த தவறுகளின் காரணமாகவே, தற்போது நாடு பெரும் நெருக்கடிகளை சந்தித்திருப்பதாகவும், பொருளாதாரத்தில் மட்டுமல்ல தார்மீகத்திலும் நாடு வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருக்கின்றார்.
சிங்கள ஆட்சியாளர்களின் வரலாற்று தவறுகள் இப்போதுதான் மல்கம் ரஞ்சித்துக்கு புரிகின்றதா? நாடு சுதந்திரமடைந்தாக சொல்லப்படும் காலத்திலிருந்து, இலங்கைத் தீவானது, உள்நாட்டு நெருக்கடிக்குள்தான் இருக்கின்றது.
அதிலிருந்து இன்றுவரையில் மீளவில்லை.
அரசியலமைப்பில் இருக்கின்ற விடயங்களை கூட, அமுல்படுத்த முடியாதளவிற்கே இந்த நாட்டின் ஆட்சி இருக்கின்றது.
உள்நாட்டு யுத்தம் முடிவுற்று பதின்மூன்று வருடங்களாகிவிட்டது.
ஆனாலும் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான கேள்விகளுக்கு இன்றுவரையில் பதிலில்லை.
அடிப்படையில் இலங்கையின் மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான கேள்விகள் அனைத்துமே, தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையுடன் தொடர்பானதாகும்.
இது தொடர்பில் மல்கம் ரஞ்சித் எப்போதுமே பேசியதில்லை.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் வடக்கு கிழக்கை சேர்ந்த ஆயர்கள் கேள்வியெழுப்பிய போதும், கர்தினால் என்னுமடிப்படையில் மல்கம் ரஞ்சித் ஒருபோதுமே தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்ததில்லை.
சிங்கள கடும்போக்குவாதிகளுடன் முரண்பட்டுக் கொள்ளாத வகையிலேயே தனது செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தார்.
இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் யுத்தத்தின் பொறிக்குள் அகப்பட்டிருந்த போது கூட, மல்கம் ரஞ்சித் அது பற்றி குரல்கொடுக்க துணியவில்லை.
எப்போதும் சிங்கள – பௌத்த சக்திகளோடு சமரசம் செய்யும் ஒரு கத்தோலிக்க தலைவராகவே மல்கமின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர்தான் மல்கம் ரஞ்சித் தார்மீகம் நீதி தொடர்பிலெல்லாம் பேசும் ஒருவராக தன்னை வெளிப்படுத்தினார்.
அதிலும் முன்னுக்குர் பின் முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டார்.
ஆரம்பத்தில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் ஒரு சக்திவாய்ந்த நாடு இருப்பதாக கூறியவர் பின்னர், மைத்திரிபால சிறிசேனவின் மீது குற்றம்சாட்டினார்.
இப்போது நாடு தார்மீகத்தை இழந்துவிட்டதாக கூறுகின்றார்.
நாடு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநிநீதிகளின் போது, மல்கம் ரஞ்சித்தும் கூட தார்மீகத்தை இழந்துபோன ஒருவர்தான்.
இப்போதும் கூட பௌத்த மதபீடத்தின், பிக்குகளின் செயல்பாடுகளை கண்டிக்கும், துணிவுள்ள மதத் தலைவராக மல்கம் தன்னை வெளிக்காட்டவில்லை.
பொதுவாகவே பேசிவருகின்றார்.
மற்றவர்களின் தார்மீகம் தொடர்பில் பேசுவதற்கு முன்னர், மல்கம் ரஞ்சித், தன்னுடைய தார்மீகம் தொடர்பில் இனியாவது சிந்தித்தால், அவர் சார்ந்த கத்தோலிக்க திருச்சபைக்கு அவர் செய்யும் நல்ல காரியமாகலாம்.
மதத் தலைவர்கள் என்போர், சுயநலன்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும்.
ஆனால் இலங்கைத் தீவில் அதனை காண முடியவில்லை.
பௌத்த மதத்தலைவர்கள் என்போர் தமிழர் வெறுப்பை கக்குவதையே பிரதான மதப் பணியாக கொண்டிருக்கின்றனர்.
சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.
அந்த விதிவிலக்குகள் எப்போதுமே தீர்மானிப்பவர்களாக இருப்பதில்லை.