மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் மோச்சா சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
மோச்சா சூறாவளி நேற்றுமுன்தினம் மணித்தியாலத்துக்கு சுமார் 195 கிலோமீற்றர் வேகத்தில் ராக்கைன் கரையைக் கடந்தது.
இதனால், ‘பு மா’ எனும் கிராமத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரியான கார்லோ தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும், நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
காவுங் தோக் கார் கிராமத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என அக்கிராமத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராக்கைனில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அங்கு பணியில் ஈடுபட்டுள்ள, நிவாரண மற்றும் அபிவிரு;தியின் பங்காளர் தொண்டர் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
மோதல்களால் பாதிக்கப்பட்ட ராக்கைன் பிராந்தியமானது அந்நாட்டு இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை அப்பிராந்தியத்தை பேரழிவுப் பிராந்தியமாக இராணுவ ஆட்சியாளர்கள் நேற்று பிரகடனப்படுத்தினர்.
2017 ஆம் ஆண்டு வன்முறைகள், அடக்குமுறைகள் காரணமாக ராக்கைன் பிராந்தியத்திலிருந்து இலட்சக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிடியோடியமை குறிப்பிடத்தக்கது.