மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு: மும்பையை வென்றது டில்லி!

0
180

அமித் மிஸ்ராவின் அசத்தல் பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட்களால் வெற்றி கொண்டது டில்லி அணி.

ஐ.பி.எல். இருபது – 20 தொடரில் நேற்றிரவு நடந்த 13ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டில்லி கப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

சென்னையில் நடந்த இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ரோஹித் சர்மா – குயின்ரன் டி கொக் இணை தொடக்கம் கொடுத்தது. ஸ்ரொய்னிஸ் வீசிய மிதவேகப் பந்தை தட்டி ஆட முனைந்து விக்கெட் காப்பாளர் ரிஷப் பந்திடம் பிடி கொடுத்து வெளியேறினார் கொக். அப்போது அவர் 2 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

அடுத்து வந்த சூரியகுமார் யாதவ், சற்றுப் பொறுமையாக ஆடினார். 4 பந்துகளை பௌண்ட்ரிக்கு விரட்டிய அவர் 24 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த, இஷான் கிஷனும் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இதனிடையே 3 பௌண்ட்ரிகள், 3 சிக்ஸர்கள் என விளாசிய ரோஹித் சர்மா 44 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மிஷ்ராவின் பந்தில் ஸ்மித்திடம் பிடி கொடுத்து வெளியேறினார்.

பின்னர் வந்த ஹார்திக் பாண்ட்யா 0, குர்ணல் பாண்ட்யா 1, கிரன் பொலார்ட் 2 என்று வந்தவேகத்திலேயே வெளியேறினர். நிதானம் காட்டிய இஷான் கிஷன் 28 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 137 ஓட்டங்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

டில்லியின் பந்துவீச்சில் அமித் மிஸ்ரா 4, ஆவேஷ் கான் 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

138 என்ற இலகுவான இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடியது டில்லி கப்பிட்டல்ஸ்.

பிரித்திவி ஷா, தவான் இணை வழக்கம் போல் தொடக்கம் கொடுத்தது. ஆனால், ஷா 7 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஜயந்த யாதவின் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார்.

இதனால், தவானுடன் இணைந்தார் ஸ்ரீவன் ஸ்மித். இருவரும் நிதானமாக ஆடினர். இணைப்பாட்டமாக 53 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், 4 பௌண்ட்ரிகளுடன் 33 ஓட்டங்களை எடுத்த ஸ்மித் ஆட்டமிழந்தார்.

அடுத்து லலித் யாதவ் வந்த நிலையில், தவான் 5 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 45 ஓட்டங்களை எடுத்து சாகரின் பந்தில் ஹார்திக் பாண்ட்யாவிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ரிஷப் பந்த் 7 ஓட்டங்களுடன் வெளியேற டில்லி தடுமாறியது. ஆனாலும், 19 பந்துகளில் 23 ஓட்டங்கள் என இலக்கு அண்மையில் இருந்தது. லலித் யாதவும், சிம்றொன் ஹெட்மேயரும் இணைந்து அணியை இலகுவாக வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

19.1 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 138 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்களால் டில்லி அணி வெற்றி பெற்றது.

லலித் யாதவ் 22 ஓட்டங்களுடனும், ஹெட்மேயர் 2 பௌண்ட்ரிகளுடன் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சில் ஜயந்த் யாதவ, பும்ரா, ராகுல் சாகர், கிரன் பொலார்ட் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக அமித் மிஸ்ரா தெரிவானார்.