பெண்கள் இன்றி இவ்வுலகில் எதும் இல்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனாலும் அன்றுதொட்டுப் பெண்கள் தெய்வங்களாக, மனவலிமை உடையவர்களாக, இளகிய மனம் கொண்டவர்களாக, குடும்பச் சுமைகளைத் தம் உடலாலும் மனதாலும் சுமப்பவர்களாக, உடல்வலிமை அற்றவர்களாக என பல அவதாரங்கள் கொண்டவர்களாக கடந்தகாலங்களில் கூறப்பட்டார்கள். அதன் பின்னர் பெண்ணியம், புரட்சி, சமவுரிமை என்றெல்லாம் மாற்றங்களுக்கு உட்பட்டு பெண்ணின் வளர்ச்சியில் பாரிய மாற்றங்களும் ஏற்படலாயின.
பொருளாதார வளர்ச்சியிலும் பெண்ணின் பங்கு சமமாகக் கணக்கிடப்பட்டு, பெண் கல்வியிலும் வேலை வாய்ப்புக்களிலும் முதன்மையடைந்து இன்று தன் சுய சம்பாத்தியத்தில் ஆண் சாராது வாழும் நிலைக்குப் பெண் வந்த பின்னரும், விண்வெளிதாண்டித் தம் அறிவைக் கடந்தபின்னும் கூட பெண்களுக்கான அடக்குமுறைகளும் குடும்பத்தில் பெண்ணை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் ஆண்களின் மனநிலையும் இன்றுவரை தொடர்கிறது.
அதற்கான காரணம் ஆண்களாலேயே கட்டமைக்கப்பட்ட எம் சமூக பண்பாட்டு விழுமியங்கள் தான் என்றாலும் மேற்குலகிலும் கூட இன்னும் பல பெண்கள் முற்றுமுழுதாக சுதந்திரத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.
அடக்குமுறைகளின் அளவீட்டில் மாற்றங்கள் இருந்தாலும் கூட அவற்றை மீறுவதிலும் அவற்றுக்கு எதிரான செயல்களைச் செய்வதிலும் மனித மனம் பாரிய ஆசை கொள்கின்றது. அப்படியான ஒரு வெளியீடு தான் இன்றைய காலகட்டத்தில் பல தமிழ்ப் பெண்களின் ஒழுக்க மீறல்களாகவும் வெளிப்பட்டுக் கொண்டு எம் சமூகத்தை அழிவின் பாதைக்குக் கொண்டு சென்றபடி இருக்கிறது.
அதற்கான முக்கிய காரணங்கள் கணவனின் அதீத உழைப்பு, மனைவி பிள்ளைகளுடன் நேரம் செலவிடாமை, பெண்களின் சுய சம்பாத்தியம் என்பவற்றைவிட அதி வேகமாக வளர்ச்சிகண்ட தொழில்நுட்பமும் இலத்திரனியல் சாதனங்களும் இதற்குத் துணை போகின்றது. எந்த இடத்திலும் எந்நேரத்திலும் கணனி, தொலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்த முடிந்துள்ளமை மனித இனத்துக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்புத்தான் எனினும் பலரின் வாழ்வை இந்தத் தொலைபேசியே சீரழித்துக்கொண்டும் இருக்கிறது.
முகநூல் ஆரம்பிக்கப்பட்டுக் கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் முகநூலூடாக பல புதிய நல்ல நட்புக்களையும் பல தெரியாத விடயங்களையும் நாம் அறிந்து கொள்வது மிக எளிதாகிவிட்டாலும் கூட சமூகத்துக்கு ஏற்புடையதற்ற சமூகச் சீர்கேடுகள் நிறைந்த இடமாகவும் முகநூல் காணப்படுவது மனவருதம் தரும் விடயம்.
சமீப காலமாக அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஒரு கருவியாக முகநூல் என்னும் இராட்சதன் தன் கோரக் கைகளை விரித்தபடி உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டு இருக்கிறான். முகநூல் என்னும் மாயக் கண்ணாடி தன் சதிவலைக்குள் சிறுகச் சிறுக அனைவரையும் சிக்கவைத்துக்கொண்டு இருக்கின்றது. இருபத்தோராம் நூற்றாண்டின் மிகச் சிறந்த, உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒருபாலமாக முகநூல் தொழிற்பட்டாலும், அத்தனைக்கத்தனை பெண்கள், ஆண்கள் எனச் சிறியோர் முதல் முதியோர் வரை மோசமான, ஒழுக்கக்கேடான விடயங்களைச் செய்வதற்கும் இந்த முகநூல் எல்லையற்ற பாதையைத் திறந்துவிட்டுள்ளது எனலாம்.
என்னதான் பெண்கள் கல்வியறிவைக் கொண்டிருந்தாலும் கூட பல பெண்கள் விழிப்புடன் இருப்பதுமில்லைச் செயற்படுவதுமில்லை. அதுவும் தற்காலத்தில் புதிய இலத்திரனியல் சாதனங்களான ஸ்கைப்பில் ஆரம்பித்து ட்விட்டர், வைபர், வற்சப், மெசெஞ்சர் என இலவசமாக எத்தனை மணி நேரமும் உரையாடக்கூடியதாகவும் நேருக்கு நேர் முகம் பார்த்து உரையாடும் வசதியையும் ஏற்படுத்தி, பலரின் வாழ்வு தடம்புரண்டு அவர்கள் குடும்பம் சிதையும் நிலைக்கே இட்டுச்செல்கின்றது. புலம் பெயர்ந்து வாழும் எம் பெண்களில் பலர் இந்த மாய வலைக்குள் சிக்கி தம் சுயம் தொலைத்து தம்மையும் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் இங்கு பிறந்து வளர்ந்த இளைய புலம்பெயர்ந்த தலைமுறையினர் முகநூல் கணக்குகள் வைத்திருப்பினும் எம்மைப்போல் அதை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் எங்களைப் போல் அறிவு குறைந்தவர்களாக இருக்காது துணிவும் சிந்தனைத் திறனும் கொண்டவர்களாக அவர்கள் இருப்பதனால் அவர்கள் பாதுகாப்பை தாமே உறுதிசெய்யக்கூடிய நிலையில் இருக்கின்றனர். மிகச் சொற்பமானவர்களே பாதிப்புக்குள்ளாகின்றனர். புலம்பெயர்ந்து வந்த தமிழ் சமூகத்தின் குணங்களில் பல அவர்களிடம் இல்லை. ஆனாலும் ஒட்டுமொத்தமாக எல்லோரும் நல்லவர்கள் என்றும் கூற முடியாது. பெற்றோர்களின் குணங்களோடும் சிலர் இருக்கின்றனர்தான்.
முன்னர் முகநூலில் செய்திகள் எழுதும் பகுதி மட்டுமே இருந்தது. அது கணனியையோ அல்லது மடிக்கணனியையோ இயக்கினாலே எழுத முடிந்தது. பெருப்பாலானோர் வீட்டின் பொது இடத்தில் கணனியை வைத்திருந்தனால் மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சமும் இருந்தது. ஆனால் தற்போது தொலைபேசியின் பயன்பாடு பெருகியபின் எந்த இடத்திலும் எந்நேரமும் தொலைபேசியை இயக்க முடிந்த நிலை தோன்றிவிட்டது. சமூக பயம் அற்றுப்போய் பலரிடம் துணிவுடன் கள்ளத்தனம் குடிகொண்டு எதையும் செய்யலாம் என்னும் நிலை தோன்றிவிட்டது. அதற்கான முக்கிய ஊக்கியாக messenger எனப்படும் தொடர்பூடகம் செயற்படுகிறது. இதில் ஒருவருடனோ அன்றிக் குழுவாகவோ எழுதலாம், உரையாடலாம். பக்கத்தில் தம் துணையை அல்லது பிள்ளைகளை வைத்துக்கொண்டே அவர்களுக்குத் தெரியாமல் இன்னொருவருக்கு செய்தியைப் பரிமாறிக்கொள்ள முடியும்.
பல புதிய நல்ல நட்புக்கள் முகநூலினூடு அறிமுகமாவதும் பல தேவையற்றவர்களின் ஊடுருவலும் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அதன் காரணமாக தேவையற்ற மன அழுத்தங்களும் இடர்களும் அதன் தொடர்ச்சியாய் பல சீர்கேடுகளும் ஏற்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. எம் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் மதிப்புக்குரிய பெரியவர்கள் கூட இப்படியான தவறுகளைச் செய்வதைக் காணும்போது அதிர்ச்சிதான் ஏற்படுகின்றது. சமூகத்துக்குத் தெரியாது எத்தனை சீரழிவான விடயங்களைச் செய்ய முடியுமோ அத்தனையையும் அஞ்சாது முகநூலிநூடே நடந்தேறுகின்றன.
வயதுப் பாகுபாடற்று இளம் பெண்களுடன் வயதுபோன ஆண்களும், தன் தாயின் வயதொத்த பெண்களை காம இச்சையுடன் அணுகும் இளவயது ஆண்களின் இச்சைகளும், அகப்படுபவரிடம் தீர்க்கப்பட்டும் அகப்படாதவரிடம் அவரைக் கொச்சைப்படுத்தியோ அன்றி பயமுறுத்தியோ தம் காரியங்களையும் அற்ப சந்தோசங்களையும் அனுபவிப்பதற்காக பெண்களைப் பகடைக் காய்களாக ஆக்கியபடி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியபடி புதிய புதிய இரைகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
மானம் போய்விடும் என்று அஞ்சி தமக்கு நடக்கும் அச்சுறுத்தல்களை வெளியே கூறாது தற்கொலைவரை கூடச் சென்றவர்கள் உண்டு. பல பெண்கள் மனபிறள்வுக்கு ஆளாகியிருப்பதுடன் அவர்களில் ஆளுமை அழிக்கப்பட்டு நிரந்தர நோயாளிகளாகி மீண்டு வர முடியா நரகத்தில் நாளும்பொழுதும் புதைந்தவண்ணம் உள்ளனர்.
இருபாலாருக்கும் நட்பு என்பதைத் தாண்டி பாலியல் ரீதியான தொடர்புகளுக்கும் உந்தப்பட்டு வெளியே நல்லவர்களாய் ஒரு முகமும் உள்ளே ஒருமுகமுமாக நடமாடுகின்றனர். இந்தியா இலங்கை மற்றும் அரபு நாடுகளில் வாழும் சில ஆண்களின் நோக்கமே முகநூலில் அகப்படும் பெண்களிடம் பணம் கறப்பதாகவும் இருக்கிறது. ஐரோப்பாவில் வாழ்பவர்களும் கூடக் குறைந்தவர்கள் அல்ல. நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் என்று தொடங்கி காதல் வலை வீசி அகப்படுபவரை பல தீய வழிகளுக்கு இட்டுச் சென்று தவறு செய்வதற்குத் தூண்டுவதும் தொடர்கிறது. அதற்காக ஆண்களை மட்டும் குறை கூற முடியாது. பல பெண்கள் இரட்டை வாழ்வு வாழ்ந்துகொண்டு குடும்பத்தையும் தம்மையும் ஏமாற்றியபடியும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
பெரும்பாலான ஆண்கள் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் அக்கறை கொண்டவர்களாகவும் காதல் கொண்டவர்களாகவும் தான் துயரத்துடன் இருப்பதாகவும் நடித்து தன் மனைவியைப் பற்றிக் குறை கூறியோ அன்றி இருக்கும் மனைவியை இல்லாதவர்களாக்கி எப்படியோ பெண்களைத் தம்வசப்படுத்துகின்றனர். இன்னுமொரு கூட்டம் ஆணும் பெண்ணும் தெரிந்தே வழிதவறிப் போவது. ஆணின் வக்கிரமான வர்ணனையில் தம் மனதைப் பறிகொடுத்துச் சீரழிந்து போகின்றனர் இன்னும் சிலர்.
முகநூலில் மற்றவர்களால் பதிவிடப்படும் நிகழ்வுகள், அவர்கள் அணியும் ஆடை அணிகள், செல்லும் சுற்றுலா, வாழ்வியல் வசதிகள், வாகனங்கள் என்பவற்றை எல்லாம் பார்த்து ஒருசாரார் தமக்கும் அப்படியான வாழ்வு கிட்டவில்லையே என்னும் ஆதங்கத்தில், நாளும் பொழுதும் மன உளைச்சலுக்கு ஆளாகி மனநிலை பாதிக்கப்படும் அபாயமும் அதிகளவு முகநூல் பயன்பாட்டினால் ஏற்படுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
ஆண்களுக்குச் சரிநிகராய்ப் பெண்களும் முகநூலைக் கையாண்டாலும் ஆண்களுக்கு ஏற்படாத பல சிக்கல்கள் பெண்களுக்கு ஏற்படுகின்றன. அதற்கான முதற் காரணம் அறிமுகம் இல்லாதவர்களை ஆராயாமல் நட்புவட்டத்தில் இணைப்பது. பெண்கள் தம் படங்களைப் போட்டே முகநூலில் அறிமுகமாகின்றனர். படங்களைப் பார்த்து, அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்து, அவர்கள் மற்றவர்களுக்கு எழுதும் பதில்கள் பார்த்து அவர்கள்மேல் மதிப்பு ஏற்பட்டு நட்பு அழைப்பை ஏற்படுத்தும் கண்ணியமான ஆண்கள் ஒருவகையினர்.
எந்தப் பெண் என்றாலும் தம் நட்பில் பெண்கள் அதிகமாக இருக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் பெண்களை நட்பாக்குவோர் இன்னொரு வகையினர். மூன்றாம் வகையினர் அவர்களை நட்பாக்கினால் அவர்களுடன் கதைத்து கடலை போடலாம் என்னும் எண்ணத்தைக் கொண்டவர்கள். நான்காம் வகையினர் தமக்கு லைக் செய்வதற்காக பெண்கள் பதிவுகளில் வந்து அதீதமாகப் பெண்ணைப் புகழ்ந்து எழுதுவதும் அவர்களை நட்பில் இணைத்துக்கொள்வதுமாக இருக்கின்றனர்.
இன்னொரு திமிர் பிடித்த ஆண்கள் கூட்டம் ஒன்றும் உண்டு. அவர்கள் தம்மை அதிமேதாவிகளாக எண்ணிக்கொண்டு அரசியல் பதிவு தொடக்கம் அறிவுசார் விடயங்களை எழுதும் கூட்டம். இவர்கள் பெண்களைப்பற்றி பெரிதாகக் கவலையோ ஆர்வமோ கொள்வதில்லை. ஆனால் ஒரு பெண் அவர்களை எதிர்த்து அல்லது அவரின் தவறை எடுத்துக் கூறினால் அவரை நட்பிலிருந்து நீக்குவது அல்லது நிரந்தரமாகத் தடை செய்து விடுவது. படித்த கூட்டம் படிக்காத கூட்டம் இரண்டிலும் இப்படியானவர்களைக் காணலாம்.
இவர்கள் போடும் பதிவுகள் இவர்களைக் கண்ணியமாக மற்றவர்க்கு அடையாளம் காட்டும். ஆனால் பெண்கள் வெளியே பொதுவெளியில் அவர்களைப் பற்றிக் கூற மாட்டார்கள் என்னும் துணிவில் அவர்களை வர்ணிப்பதும் மறைமுகமாக அவர்கள்மேல் தமக்கு இருக்கும் ஆசையைக் கூறுவதுமாக. ஆனால் இவர்களால் ஆபத்து இருப்பதில்லை. இன்னும் ஒரு காவாலிக் கூட்டம் அடையாளங்களுடனும் அடையாளம் இன்றியும் இருப்பர். முகநூலுக்கு வருவதே பெண்களைக் குறிவைத்தபடிதான்.
புலம்பெயர்ந்த ஆண்களில் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும் பின்னருமாக இயக்கத்தில் இருந்தோம், போராடினோம் என்று கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்கு வந்து சேர்ந்தவர்களும் பல தில்லுமுல்லுகளை செய்கின்றனர். எம் நாட்டுக்காகப் போராடியவர்கள் மேல் மற்றவர்களுக்கு இருக்கும் மதிப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி பல தீய செயல்களை செய்தபடி இருக்கின்றனர். இது அங்கு தம் உயிரைக் கொடுத்த மாவீரர்கள் ,போராளிகள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நீங்கள் செய்யும் துரோகம். உங்களை வைத்தே மற்றவர்களைக் கணிக்கும் நிலையை தயவுசெய்து ஏற்படுத்தாதீர்கள்
ஒரு ஆண் வழிதவறிப் போகும் போது ஏற்படும் பாதிப்பிலும் பெண்கள் வழிமாறும்போது ஏற்படும் பாதிப்புக்கள் பாரதூரமானவை. அவை அவர்கள் கணவன்மாருடன் மட்டும் நின்று விடாது பிள்ளைகளின் வாழ்வையும் நிலைகுலைய வைக்கின்றன. இதனால் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவை கூடப் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுப் போகிறது.
இந்தநிலை மாறவேண்டும் எனில் பாதிக்கப்பட்ட பெண்கள் பொதுவெளியில் அப்படிப்பட்ட ஆண்களைப் பற்றித் துணிந்து கூற முன்வரவேண்டும். இந்தக் காலத்தில் உண்மையான அன்பு என்பது எவரிடமும் இல்லை. பெண்களே உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள். முகநூலில் காணும் ஆண்கள் எல்லோரையும் அவர்களின் “உனக்காக நான் இருக்கிறேன்” என்னும் மயக்கும் வார்த்தைகளையும் நம்பவே நம்பாதீர்கள். உங்கள் கணவனைப் பிள்ளைகளை முதலில் நேசித்து அவர்களிடம் உங்கள் அன்பை, அக்கறையைக் காட்டுங்கள். அவர்கள் மட்டுமே உங்களை உண்மையாக நேசிக்கக் கூடியவர்கள். உங்கள் குடும்பத்தில் ஏதும் பிரச்சனை என்றாலும் இன்னொரு ஆணிடம் உங்கள் குடும்ப விடயங்களை சொல்லவே சொல்லாதீர்கள். அதுவே உங்களுக்கு எதிராகத் திரும்பலாம்.
நல்ல நட்பாகத் தேடித் பெறுங்கள். உங்கள் உடலை அழகை எவன் புகழ்கின்றானோ அவன் நிட்சயமாய் நல்லவனாக இருக்கமாட்டான் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். உங்களுடன் பழகிவிட்டு அதை ஆயுதமாக்கி யார் பணம் கடனாகக் கேட்டாலும் அன்றுடனேயே அவன் உறவை முறித்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவன் நிட்சயமாக நேர்மையானவனாக இருக்கவே மாட்டான். கடன் அன்பை முறிக்கும் என்று நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. எல்லாற்றையும் தம் அறிவுக்கண் கொண்டு அலசியதில் அப்பட்டறிவுடயே எல்லாவற்றையும் கூறியுள்ளனர்.
பெண்களே உங்களுக்கு எதிராக ஒரு ஆண் எது செய்தாலும் அவனைத் தண்டிக்கக் கூடிய பல சட்டங்கள் எம் நாட்டில் இல்லாவிட்டாலும் புலம்பெயர் நாடுகளில் தாராளமாக உண்டு. நம்பிக்கையுடையதாக, மற்றவர்க்குத் தெரியவிடாது இரகசியம் பேணக்கூடிய வகையில் பெண்களுக்கு உதவ நிறைய நிறுவனங்களும் சட்டத்துறையும் உண்டு. உங்கள் போலிக் கவுரவத்தை விட்டு உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முடியும். உங்களுக்கு ஆலோசனைகள் தேவையாக இருந்தால் “வாங்கோ கதைக்கலாம்” என்னும் முகநூல்க் குழுமத்தினூடாகப் பெற்றுக்கொள்ளமுடியும். உங்களைப் பற்றிய செய்திகள் வேறு எவருக்கும் தெரியாதவாறு இரகசியம் காக்கப்படும். அறிவாகத் துணிவாக செயல்பட்டு, ஆண்கள் என்னும் புதைகுழியில் மாண்டுவிடாது உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
அன்புகொள்வதும் நட்புக்கொள்வதும் தவறான செயல் அல்ல. ஆனாலும் நம்பிக்கையானவர்களை நல்லவர்களை கண்டுணர்ந்து அவர்களுடன் நட்புக்கொண்டால் வாழ்வு எந்தவித சூறாவளிகளையும் சுழல்களையும் தாண்டி நின்மதியாகவும் மகிழ்வாகவும் செல்லும்.
இப்படியாக இன்றைய சமூகம் நிலைகுலைந்து போவதற்கு யாருமே எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தாலும் ஆண்களோ பெண்களோ தமது குடும்பத்தின் மேல் அக்கறை கொண்டு பிள்ளைகள் வாழ்வை நன்றாக அமைக்க, ஒன்றும் தெரியாதவராய் இராது உங்கள் குடும்பத்தவர் என்ன செய்கின்றனர் என்று சந்தேகம் கொள்ளாது அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாதபடி கண்காணியுங்கள். சிறிய வயதினர் கணனி வலைத்தளத்துடன் கூடிய (Internet Access) உள்ள தொலைபேசியைப் பயன்படுத்துவதை அனுமதிக்காதீர். பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்காது குடும்பத்துடன் விடுமுறை சென்று, மனம் விட்டுப் பேசி, குறை நிறைகளைக் கேட்டறிந்து, உண்மை அன்பு செலுத்தினால் மட்டும் சமூகத்தைக் காக்கவோ திருத்தவோ முடியாவிட்டாலும் கூட எம் எம் குடும்பத்தையாவது நாம் சிதைவுறாது காக்க முடியும்.
முகநூலை முற்றாகக் கைவிடும்படி நான் கூறவில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அளவாக முகநூலில் செலவிட்டு மனக்கட்டுப்பாட்டுடன் எமக்குத் தேவையான நல்லவற்றை மட்டும் முகநூலிநூடு பெற்றுக்கொண்டு, தேவையற்றவர்களை முதலிலேயே தடுத்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டோமானால் மகிழ்வோடு நாமும் எம் குடும்பமும் நின்மதியாய் வாழமுடியும்.
நிவேதா உதயராயன்