ஜெய்பூர், சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் கடைசிக்கு முந்தைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸை பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்டு அணிகள் நிலையில் 19 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை அடைந்தது.
அர்ஷ்தீப் சிங், மாரக்கோ ஜென்சன் ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள், ஜொஷ் இங்லிஸ், ப்ரியான்ஷ் ஆரியா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன பஞ்சாப் கிங்ஸை இலகுவாக வெற்றிபெற வைத்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.
மும்பை இண்டியன்ஸின் துடுப்பாட்டம் எதிர்பார்த்தளவு சிறப்பாக அமையவில்லை.
ரெயான் ரிக்ல்டன், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 31 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் உறுதியான இணைப்பாட்டம் எதுவும் பதிவாகவில்லை.
ரியால் ரிக்ல்டன் 27 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.ஒரு பக்கத்தில் சீரான இடைவெளியில் இரண்டு விக்கெட்கள் சரிய மறுபக்கத்தில் சூரியகுமார் யாதவ் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார். அணித் தலைவர் ஹார்திக் பாண்டியாவுடன் 5ஆவது விக்கெட்டில் சூரியகுமார் யாதவ் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஹார்திக் பாண்டியா 26 ஓட்டங்களைப் பெற்றதுடன் அவரைத் தொடர்ந்து நாமன் திர் 20 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்த சூரியகுமார் யாதவ் 57 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஜயகுமார் விஷாக் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
185 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மொத்த எண்ணிக்கை 34 ஓட்டங்களாக இருந்தபோது ப்ரப்சிம்ரன் சிங் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து ப்ரியான்ஷ் ஆரியாவும் ஜொஷ் இங்லிஸும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 111 ஓட்டங்களைப் பகிர்ந்து பஞ்சாப் கிங்ஸை பலமான நிலையில் இட்டனர்.
ப்ரியான்ஷ் ஆரியா 35 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஐபிஎல் இல் தனது முதலாவது அரைச் சதத்தைக் குவித்த ஜொஷ் இங்லிஸ் 73 ஓட் டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் 26 ஓட்டங்களுடனும் நெஹால் வதேரா 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் மிச்செல் சென்ட்னர் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.